மர்மமான முறையில் இறந்த வாலிபரின் உடல் தோண்டி எடுப்பு ஆய்விற்காக மருத்துவக்குழுவினர் எடுத்து சென்றனர்


மர்மமான முறையில் இறந்த வாலிபரின் உடல் தோண்டி எடுப்பு ஆய்விற்காக மருத்துவக்குழுவினர் எடுத்து சென்றனர்
x
தினத்தந்தி 1 Nov 2018 4:00 AM IST (Updated: 1 Nov 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிமடம் அருகே மர்மமான முறையில் இறந்த வாலிபரின் உடலை தோண்டி ஆய்விற்காக மருத்துவக்குழுவினர் எடுத்து சென்றனர்.

வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சிலம்பூர் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 33). இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதையடுத்து ரமேஷ் உடலை அவரது உறவினர்கள், அப்பகுதியில் அடக்கம் செய்தனர். மேலும் ரமேஷ் சாவில் மர்மம் இருப்பதாக கூறி சிலம்பூர் கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகன் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் ரமேசின் மனைவி ஜெயலட்சுமி, தம்பி சங்கர், தாய் மனோன்மணி, சகோதரிகள் ஜெயந்தி, செல்வராணி, மாமியார் விருத்தம்பால், உறவினர் எழிலரசி ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரமேஷ் சாவில் மர்மம் இருப்பதால், அவரை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து உடலை தோண்டி எடுக்க போலீசார் முடிவு எடுத்தனர்.

அதன்படி நேற்று ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி, தாசில்தார் கோவிந்தராஜ், கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகன் ஆகியோர் தலைமையில் ரமேஷின் உடலை தோண்டி எடுக்க ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையை சேர்ந்த மருத்துவக்குழுவினர் வந்தனர். இதனால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் உடலை தோண்டி எடுத்தனர். ரமேஷ் இறந்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகுவதால், துர்நாற்றம் வீசியது. பின்னர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை டாக்டர் கீதா உடற்கூறு ஆய்வு செய்வதற்காக ரமேஷின் உடலில் சில பாகங்களை சேகரித்து எடுத்துச் சென்றார். உடற்கூறு ஆய்வின் இறுதி அறிக்கையில் தான் ரமேஷ் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story