ஒட்டன்சத்திரம் அருகே: மலைக்கிராமங்களில் சுற்றித்திரியும் காட்டுயானைகள்
ஒட்டன்சத்திரம் அருகே, மலைக்கிராமங்களில் காட்டு யானைகள் சுற்றித்திரிகின்றன. அவற்றை வனப்பகுதியில் விரட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சத்திரப்பட்டி,
ஒட்டன்சத்திரம் தாலுகாவில் வடகாடு, வண்டிப்பாதை, பெத்தேல்புரம், புலிக்குத்திக் காடு, சிறுவாட்டுக்காடு உள்பட 14 மலைக்கிராமங்கள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி இந்த கிராமங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் யானை, கடமான், சிறுத்தை, காட்டெருமை ஆகியவை உள்ளன.
இவை தண்ணீர் குடிப்பதற்காக, வடகாடு அருகே உள்ள பரப்பலாறு அணைக்கு வந்து செல்வது வழக்கம் ஆகும். குறிப்பாக காலை, மாலை நேரத்தில் அணையில் தண்ணீர் குடிக்கும் வனவிலங்குகளை பார்க்கலாம். இந்தநிலையில் கடந்த சில தினங் களாக பரப்பலாறு அணைப்பகுதி, பெத்தேல்புரம், சிறுவாட்டுக்காடு ஆகிய மலைக் கிராமங்களில் காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
மலைக்கிராமங்களில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டுயானைகள் பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். யானைகளின் நடமாட்டத்தினால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் மாணவ-மாணவிகள் அவதிப்படுகின்றனர்.
இதற்கிடையே யானைகள் நடமாட்டம் குறித்து தகவலறிந்த ஒட்டன்சத்திரம் வனச்சரகர் செந்தில்குமார், வனவர் தாஜூதீன் மற்றும் வனத்துறையினர் மலைக்கிராமங்களுக்கு விரைந்து சென்றனர். பின்னர் பட்டாசு வெடித்தும், தீப்பந்தம் காட்டியும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பகலில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் தனியாக வெளியே செல்ல வேண்டாம். கூடுமானவரை அதிகாலை, மாலை நேரங் களில் வெளியில் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story