கொசு புழுக்கள் உற்பத்தியாகும் நிலையில் வைத்திருந்த வீட்டின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் - நகராட்சி ஆணையாளர் நடவடிக்கை


கொசு புழுக்கள் உற்பத்தியாகும் நிலையில் வைத்திருந்த வீட்டின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் - நகராட்சி ஆணையாளர் நடவடிக்கை
x
தினத்தந்தி 1 Nov 2018 3:00 AM IST (Updated: 1 Nov 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

கொசு புழுக்கள் உற்பத்தியாகும் நிலையில் வைத்திருந்த வீட்டின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நகராட்சி ஆணையாளர் சி.ஸ்டாலின்பாபு உத்தரவிட்டார்.

செய்யாறு, 

செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று கோபால் தெரு, ராமகண்ணுதெரு உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணியினை நகராட்சி ஆணையாளர் சி.ஸ்டான்லிபாபு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது ராமகண்ணுதெருவில் மோகன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் 3 குடும்பத்தினர் வாடகைக்கு வசித்து வருகின்றனர். அந்த வீட்டின் உள்பகுதியில் கழிவுநீர் டேங்க் உடைந்து திறந்த நிலையில் கழிவுநீர்தேங்கி டெங்கு காய்ச்சல் பரவக்கூடிய கொசு புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து வீட்டினை தூய்மையின்றியும், டெங்கு காய்ச்சல் பரவும் கொசு புழுக்கள் உற்பத்தியாகும் நிலையிலும் வைத்திருந்ததால் வீட்டின் உரிமையாளர் மோகனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நகராட்சி ஆணையாளர் சி.ஸ்டான்லிபாபு உத்தரவிட்டார். மேலும் வீட்டிற்கு சீல் வைத்தார்.

அதைத் தொடர்ந்து மற்றொரு வீட்டில் சோதனை செய்தபோது வீட்டிற்கு ‘செப்டிக் டேங்க்’ கட்டாமல் நேரடியாக மனித கழிவுகளை கழிவுநீர் கால்வாயில் இணைத்து வெளியேற்றியது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த வீட்டின் உரிமையாளர் முனிரத்தினவேலு என்பவருக்கும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தார்.

ஆய்வின் போது நகராட்சி பொறியாளர் எட்வின் பிரைட் ஜோஸ், துப்புரவு ஆய்வாளர் மதனராசன் மற்றும் பலர் உடனிருந்தனர். 

Next Story