டிராக்டருக்காக நண்பனை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு
டிராக்டருக்காக நண்பனை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா அரசங்கண்ணி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 38). சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவி (45). சரவணனும், ரவியும் சேலத்தில் உள்ள ஒரு கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்த போது இருவரும் நண்பர்களாகி உள்ளனர்.
பின்னர் ரவி டிராக்டர் வாங்கி தனியாக தொழில் செய்ய முடிவெடுத்தார். அதன்படி, சேலத்தில் புதிதாக ஒரு டிராக்டரை ரவி வாங்கினார். டிராக்டரை பறிக்க வேண்டும் என்று சரவணன் திட்டம் தீட்டினார். அதன்படி, கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி ரவியை, சரவணன் செங்கத்திற்கு வரவழைத்துள்ளார். ரவியும் புதிய டிராக்டரோடு செங்கம் வந்தார். அங்கு மதுகுடித்த ரவி போதையில் சுயநினைவை இழந்தார்.
டிராக்டரை சரவணன் ஓட்டிக் கொண்டு மேல் செங்கம் தண்டம்பட்டு கிராமம் அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றார். அங்கு ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் சரவணன், லுங்கியால் ரவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அந்த டிராக்டரையும், ரவியின் செல்போனையும் எடுத்துக் கொண்டு எறையூர்அருகே உள்ள தனது அக்காள் வீட்டின் அருகே பதுக்கி வைத்திருந்தார்.
இதற்கிடையே ரவியின் உடலை பார்த்த வனத்துறையினர் இதுகுறித்து மேல்செங்கம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
இதுகுறித்த வழக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி மகிழேந்தி தீர்ப்பு கூறினார். அதில் ரவியை கொலை செய்யும் நோக்கோடு டிராக்டரை கடத்தியதற்காக ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும், டிராக்டர், செல்போனை பறித்து சென்றதற்காக 10 ஆண்டுகள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை வேலூர் ஜெயிலுக்கு அழைத்துச் சென்றனர்.
Related Tags :
Next Story