நாட்டறம்பள்ளியில் லாரி மீது சொகுசு பஸ் மோதல்; 2 டிரைவர்கள் பலி - 2 பேர் படுகாயம்


நாட்டறம்பள்ளியில் லாரி மீது சொகுசு பஸ் மோதல்; 2 டிரைவர்கள் பலி - 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 1 Nov 2018 3:30 AM IST (Updated: 1 Nov 2018 1:40 AM IST)
t-max-icont-min-icon

நாட்டறம்பள்ளியில் லாரி மீது சொகுசு பஸ் மோதியதில் 2 டிரைவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாட்டறம்பள்ளி,

சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி தனியார் சொகுசு பஸ் நேற்று முன்தினம் புறப்பட்டது. அந்த பஸ்சை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த டிரைவர் அஜித் (வயது 22) ஓட்டினார். துணை டிரைவராக தேனியை சேர்ந்த சரவணகுமார் (33) உடன் வந்தார்.

நேற்று அதிகாலை 3 மணி அளவில் அந்த பஸ் வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது வேகமாக மோதியது. இதில் பஸ்சின் முன்புறம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் டிரைவர் அஜித், துணை டிரைவர் சரவணகுமார் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் பஸ்சில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த மணிகண்டன் (42), திருவண்ணாமலையை சேர்ந்த தமிழரசன் (25) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதனையடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story