‘மீட்கப்பட்ட சிலைகளை கோவில்களுக்கு கொண்டு சேர்க்கும் பணி நடக்கிறது’ - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி


‘மீட்கப்பட்ட சிலைகளை கோவில்களுக்கு கொண்டு சேர்க்கும் பணி நடக்கிறது’ - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
x
தினத்தந்தி 31 Oct 2018 11:15 PM GMT (Updated: 31 Oct 2018 8:11 PM GMT)

சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ள சிலைகளை கோவில்களுக்கு கொண்டு சேர்க்கும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

குஜராத் மாநிலத்தில் உலகத்திலேயே உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில் தமிழக அரசின் சார்பில் நானும், அமைச்சர் கடம்பூர் ராஜுவும் கலந்துகொள்கிறோம்.

தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில் உபயோகிக்கப்பட்ட விவசாய கருவிகளின் இரும்பு சேகரிக்கப்பட்டு சிலை உருவத்தில் பதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் இருந்து கடத்தி செல்லப்பட்ட சிலைகளை மீட்பதற்கு மத்திய அரசு ஒரு குழு அமைத்து உள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எடுத்த முயற்சியினால் ஆஸ்திரேலியாவில் இருந்து 7 சிலைகளும், சிங்கப்பூரில் இருந்து சில சிலைகளும் பெறப்பட்டு உள்ளன. அமெரிக்காவில் உள்ள சிலைகளை மீட்க அவற்றை அடையாள காண முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மத்திய அரசு அமைத்துள்ள குழுவில் உள்ள உறுப்பினர்கள் உலக நாடுகளுக்கு நேரிடையாக சென்று சிலையை மீட்க உள்ளனர். சிலைகள் மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் 248 சிலைகள் மற்றும் அரும் கலை பொருட்களை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட சிலை மற்றும் பொருட்களை கோவில்களுக்கு கொண்டு சென்று சேர்க்கும் பணிகள் தொடங்கி உள்ளது.

நீதிமன்ற உத்தரவை பெற்று கொண்டு செல்ல வேண்டும் என்பதால் அந்த அடிப்படையில் பணிகள் நடந்து வருகிறது. மீட்கப்பட்ட சிலைகளை வைக்க எழும்பூர் அருங்காட்சியகத்தில் இடம் வழங்கப்பட்டு உள்ளது. சிலைகளை சோதனை செய்த பின்னர் தான் உள்ளே வைக்கப்பட வேண்டும். சிலைகளை பாதுகாப்பாக வைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story