திருநின்றவூர் அருகே மோட்டார் சைக்கிள் பெட்டியில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் திருட்டு
திருநின்றவூர் அருகே மோட்டார் சைக்கிள் பெட்டியில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் திருடப்பட்டது.
ஆவடி,
திருநின்றவூரை அடுத்த நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் சேமநாதன் (வயது 70). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் மதியம் திருநின்றவூர் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் நடத்திவரும் நகை அடகு கடைக்கு சென்றார். அங்கு தன்னுடைய 7 பவுன் நகையை ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கு அடகு வைத்தார். அங்கிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.
மோட்டார் சைக்கிளை தனது வீட்டின் முன்னர் நிறுத்திய அவர், சாவியை அங்கேயே வைத்துவிட்டு வீட்டுக்குள் சென்றதாக கூறப்படுகிறது.
சிறிது நேரத்தில் வெளியே வந்து பணத்தை எடுப்பதற்காக மோட்டார் சைக்கிள் பெட்டியை திறந்த போது அதில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மர்மநபர்களால் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து சேமநாதன் திருநின்றவூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் நிலையம் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் சேமநாதனை பின் தொடர்வது போல 2 பேர் இருசக்கர வாகனத்தில் செல்வது தெரியவந்தது.
எனினும் அவர்களுக்கும், இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? அல்லது சேமநாதன் பணத்தை வேறு இடத்தில் வைத்து விட்டு நாடகம் ஆடுகிறாரா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.