மனித உடல் உறுப்புகளை எரிப்பதாக புகார் தனியார் நிறுவனத்துக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்
கே.கே.பூதூரில் மனித உடல் உறுப்புகளை கொண்டு வந்து எரிப்பதால் பொதுமக்களுக்கு நோய் ஏற்படுவதாக கூறி அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம்,
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த கே.கே.பூதூரில் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்கு பின்னர் கழிவாக வரக்கூடிய மனித உடல் உறுப்புகளை கொண்டு வந்து எரிப்பதால் புகை மூட்டம் உருவாகி பொதுமக்களுக்கு நோய் ஏற்படுவதாக கூறி அந்த பகுதியை சேர்ந்த சுமார் 200–க்கும் மேற்பட்டோர் நிறுவனத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த மதுராந்தகம் தாசில்தார் ஏகாம்பரம், துணை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன், இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், வருவாய் ஆய்வாளர் சங்கர், கிராம நிர்வாக அலுவலர் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி தீபாவளி முடிந்த பிறகு சுமுக தீர்வு காணப்படும் அதுவரை நிறுவனம் பூட்டப்படும் என்று கூறி நிறுவனத்தை பூட்டினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.