திருந்திய நெல் சாகுபடிக்கு 84 கிராமங்கள் தேர்வு கலெக்டர் ராஜாமணி பேட்டி


திருந்திய நெல் சாகுபடிக்கு 84 கிராமங்கள் தேர்வு கலெக்டர் ராஜாமணி பேட்டி
x
தினத்தந்தி 31 Oct 2018 11:00 PM GMT (Updated: 31 Oct 2018 8:45 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் திருந்திய நெல் சாகுபடிக்கு 84 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ராஜாமணி கூறினார்.

திருச்சி, 
திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர் தாலுகாவுக்கு உட்பட்ட குவளக்குடி, வேங்கூர், கீழ்முல்லக்குடி ஆகிய கிராமங்களில் திருந்திய நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதையும் மற்றும் வளர்ச்சிப்பணிகளையும் கலெக்டர் ராஜாமணி ஆய்வு செய்தார்.

இதில் இணை இயக்குனர்(வேளாண்மைத்துறை) பால்ராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தி, துணை இயக்குனர்கள் ராஜேஸ்வரன், பெரியகருப்பன், ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆய்வுப்பணி முடிந்ததும் கலெக்டர் ராஜாமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

திருந்திய நெல் சாகுபடி திருச்சி மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து ஆகஸ்டு மாதம் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனால் திருச்சி மாவட்டத்தில் 1 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 50 ஆயிரம் ஏக்கர் நடவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் மாத இறுதிக்குள் மீதமுள்ள பகுதிகளில் திருந்திய நெல் சாகுபடி செய்யப்படும்.

பாரம்பரிய நெல் சாகுபடியில் ஒரு ஏக்கருக்கு 2 டன் மகசூல் கிடைக்கும். திருந்திய நெல் சாகுபடியில் 1 ஏக்கருக்கு 2.79 டன் மகசூல் கிடைக்கும். இதன் மூலம் 700 கிலோ முதல் 800 கிலோ வரை மகசூல் கூடுதலாக பெறமுடியும். சாதாரண நெல் பயிரிடும் போது 1 ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் செலவாகும். ஆனால் திருந்திய நெல் சாகுபடி மூலம் பயிரிடும் போது ரூ.20 ஆயிரம் மட்டுமே செலவாகும்.

திருச்சி மாவட்டத்தில் திருந்திய நெல் சாகுபடி திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விவசாயிகள் 70 சதவீதம் திருந்திய நெல் சாகுபடியை பின்பற்றுகின்றனர். தற்போது அனைத்து கிராமங்களிலும் 100 சதவீதம் திருந்திய நெல் சாகுபடி திட்டத்தை கொண்டு செல்ல 84 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்காக 84 உதவி வேளாண் அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருந்திய நெல் சாகுபடியில் 1 ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் கூடுதல் லாபம் கிடைக்கும். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மூலம் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள வரப்பு ஓரங்களில் சாமந்தி, துவரை, உளுந்து, எள், சூரியகாந்தி போன்ற பயிர்களை பயிர் செய்வதன் மூலம் நெற்பயிர்கள் பூச்சிகள் தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்படும்.

சம்பா சாகுபடிக்கு போதுமான நெல் விதைகள், உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பற்றாக்குறை என்ற நிலை இங்கு இல்லை. அரசு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு உரங்களை விற்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்காது. தற்போது மூட்டைகளில் விலை அச்சிடப்படாத 24 டன் கலப்பு உரங்கள் வேளாண்மைத் துறையினரால் சீல் வைக்கப்பட்டு விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story