கன்னியாகுமரியில் துணிகரம் : கிறிஸ்தவ ஆலயத்தில் 18 பவுன் நகை கொள்ளை - கோவிலின் உள்ளே பதுங்கி இருந்து மர்ம நபர் கைவரிசை
கன்னியாகுமரியில் புனித அலங்கார உபகார மாதா ஆலயத்தில் 18 பவுன் நகைகள் கொள்ளை போயின. கோவிலின் உள்ளே பதுங்கி இருந்து கைவரிசை காட்டிய மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் 100 ஆண்டு பழமையான புனித அலங்கார மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு ஏராளமான பக்தர்கள் வந்து பிரார்த்தனை செய்து நேர்ச்சை செலுத்துவது வழக்கம். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் திருப்பலி முடிந்து கோவில் நிர்வாகத்தினர் ஆலயத்தை பூட்டிவிட்டு சென்றனர்.நேற்று காலையில் ஆலயத்தை திறந்து உள்ளே சென்ற போது, ஜெபமாலை மாதா சொரூபம் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டி உடைந்து கிடந்தது. மேலும், சொரூபத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி, 4 வளையல் உள்ளிட்டவை காணாமல் போய் இருந்தது. பீடத்தில் இருந்த மற்றொரு மாதாசொரூபத்தின் கையில் உள்ள குழந்தை இயேசுவின் தலையில் வைக்கப்பட்டிருந்த தங்க கிரீடமும் கொள்ளை போய் இருந்தது. மொத்தம் 18 பவுன் நகைகள் கொள்ளை போய் உள்ளன.
தகவல் அறிந்த பங்கு குரு ஜோசப் ரொமால்ட் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் ஆலயம் முன் கூடினர். தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அந்த ஆலயத்தில் 5 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. அவற்றில் 3 கேமராக்கள் மூடப்பட்டு இருந்தன. 2 கேமராக்களில் கொள்ளை நடந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது இரவில் ஆலயத்தை பூட்டிய போது உள்ளே 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் பதுங்கி இருப்பதும், அவர், நள்ளிரவில் கண்ணாடி பெட்டியை உடைத்து நகைகளை கொள்ளையடிப்பதும் கேமராவில் பதிவாகி இருந்தது.
மேலும், அந்த நபர் உள்ளே பதுங்கி இருந்த போது, தண்ணீர் பாட்டில், உணவு பொட்டலம் போன்றவற்றை ஆகியவற்றை தயாராக வைத்துள்ளார். கொள்ளையடித்த பின்பு நிதானமாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, காலையில் ஆலயத்தின் கதவு திறக்கப்பட்ட பின்பு நைசாக வெளியே செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது. அவர் வீசிய உணவு பொட்டலமும், தண்ணீர் பாட்டிலும் ஆலயத்தில் சிதறி கிடந்தன. மேலும், ஒரு சிகரெட் பற்ற வைக்கும் லைட்டரையும் கொள்ளையன் ஆலயத்தில் விட்டு சென்றுள்ளான். அவற்றை போலீசார் கைப்பற்றினர்.
இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம வாலிபரை தேடி வருகிறார்கள்.
மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலத்தில் மர்மநபர் சாவகாசமாக கோவிலின் உள்ளே பதுங்கி இருந்து நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story