மளிகை கடையில் 2 ஆயிரம் ரூபாய் கலர் ஜெராக்ஸ் கொடுத்து நூதன திருட்டு


மளிகை கடையில் 2 ஆயிரம் ரூபாய் கலர் ஜெராக்ஸ் கொடுத்து நூதன திருட்டு
x
தினத்தந்தி 1 Nov 2018 3:30 AM IST (Updated: 1 Nov 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

சூலூரை அடுத்த பாப்பம்பட்டியில் மளிகை கடையில் 2 ஆயிரம் ரூபாய் கலர் ஜெராக்ஸ் கொடுத்து நூதன திருட்டு.

சூலூர், 

சூலூரை அடுத்த பாப்பம்பட்டி, அயோத்தியா புரத்தை சேர்ந்தவர் முத்து. இவருடைய மனைவி சிவகாமி(வயது 65). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முத்து இறந்து விட்டார். சிவகாமி அயோத்தியா நகரில் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். மேலும் அங்கு கீழ் தளத்தில் மளிகை கடை ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இங்கு நேற்று முன்தினம் கருப்பு நிற காரில் வந்த மர்ம நபர் கடையில் இருந்த சிவகாமியிடம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து, சிகரெட், தண்ணீர் பாட்டில் என ரூ.300-க்கு பொருட்கள் வாங்கினார். ரூ.2 ஆயிரத்துக்கு சில்லறை இல்லாததால் சிவகாமி அருகில் உள்ள கடைக்கு சில்லறை வாங்க சென்றார்.அப்போது அந்த மர்ம நபர் கடையில் இருந்த பணத்தை திருடினார். பின்னர் சில்லறை வாங்கி வந்த சிவகாமியிடம் இருந்த பணத்தை பறித்து கொண்டு அங்கு தயாராக நின்ற காரில் ஏறி தப்பி சென்றார். இதனால் சந்தேகமடைந்த சிவகாமி கடைக்கு வந்து பார்த்தபோது, மேஜை திறந்து கிடந்தது, மேலும் அதில் இருந்த ரூ.12 ஆயிரத்தையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். ஆனால் அதற்குள் காரில் வந்தவர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.காருக்குள் மேலும் சிலர் இருந்ததாக தெரிகிறது.

மர்ம ஆசாமி கொடுத்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டை சோதனை செய்து பார்த்தபோது அது கலர் ஜெராக்ஸ் என்பது தெரியவந்தது. கலர் ஜெராக்ஸ் கொடுத்து கடையில் இருந்த பணத்தை நூதன முறையில் திருடி சென்ற சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் இதுகுறித்த தகவலின் பேரில், அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில்கட்டிடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்தனர். அதில் மர்ம ஆசாமியின் உருவம் பதிவானது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் கார் பதிவு எண் பலகை சரிவர தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story