நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன் - தொல்.திருமாவளவன் பேட்டி
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன் என்று தொல்.திருமாவளவன் கூறினார்.
புவனகிரி,
கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம் சிதம்பரம் தெற்கு வீதியில் நடந்தது. கூட்டத்திற்கு துணை பொதுச்செயலாளர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். முதன்மை செயலாளர் பாவரசு, மண்டல செயலாளர் திருமாறன், மாவட்ட துணைசெயலாளர் திராவிடமணி, நாடாளுமன்ற தொகுதி செயலாளர்கள் கடலூர் தாமரைச்செல்வன், சிதம்பரம் செல்லப்பன், செய்தி தொடர்பாளர் திருவரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் பால.அறவாழி வரவேற்றார். கூட்டத்தில் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது:-
திருச்சியில் நடைபெறும் தேசம் பாதுகாப்போம் மாநாட்டின் பணிகளை நிர்வாகிகள் சிறப்பாக செய்ய வேண்டும். இந்த மாநாட்டில் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள போதிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மாநாட்டிற்கு தேவையான நிதிகளை பொறுப்பாளர்கள் தரவேண்டும்.
திருச்சியில் நடைபெறும் இந்த மாபெரும் மாநாட்டிற்கு கட்சியின் நிர்வாகிகள் மதுஅருந்தாமல் வரவேண்டும் என்பது என்னுடைய அன்பான கட்டளை. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாடு வரலாறு படைக்கும் மாநாடாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் கருப்பசாமி, முல்லைவேந்தன், நீதிவளவன், திருமார்பன், செல்வமணி, சுதாகர், கார்க்கிவளவன், ராஜேஷ், பாவாணன், உஞ்சியழகன், வீர.ஜெகன், எழில்வேந்தன், குறிஞ்சிவளவன், சிற்றரசு, இன்பவளவன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கட்சியின் நிர்வாகி ஆதிமூலம் நன்றி கூறினார்.
இதனை தொடர்ந்து தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் மீண்டும் நான் போட்டியிடுவேன். தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க வேண்டும். இடைத்தேர்தலில் போட்டியிட விடுதலை சிறுத்தைகள் கட்சி முனைப்புக்காட்டாது. வரும் தேர்தல்களில் தி.மு.க. எடுக்கும் முடிவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கட்டுப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story