விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் புதிய மேம்பாலத்திற்கான உறுதிச்சான்றளிப்புக்கு முன்பு வாகன போக்குவரத்தை அனுமதிக்க கூடாது; நெடுஞ்சாலைத்துறையிடம் வலியுறுத்தல்


விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் புதிய மேம்பாலத்திற்கான உறுதிச்சான்றளிப்புக்கு முன்பு வாகன போக்குவரத்தை அனுமதிக்க கூடாது; நெடுஞ்சாலைத்துறையிடம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 31 Oct 2018 10:51 PM GMT (Updated: 31 Oct 2018 10:51 PM GMT)

விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திட்டப்பணி முழுமையாக முடிவடையாத நிலையில் அதற்கான உறுதிச்சான்றளிப்புக்கு முன்பு மேம்பாலத்தில் வாகன போக்குவரத்தை அனுமதிக்க கூடாது என மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள ரெயில்வே லெவல் கிராசிங்கில் நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பின்பு மதுரை ஐகோர்ட்டு அனுமதி அளித்ததன் பேரில் ரெயில்வே மேம்பால கட்டுமானப்பணி கடந்த 2016–ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்குள் பணி முடிக்கப்பட்டு மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தாலும், பல்வேறு காரணங்களால் திட்டப்பணியில் ஏற்பட்ட தாமதத்தால் மேம்பால கட்டுமானப்பணி 90 சதவீதம் முடிவடைந்து உள்ளது.

மேம்பாலம் முடிவடையும் இடத்தில் இருந்து ராமமூர்த்திரோடு ரெயில்வே சந்திப்பு வரை சாலை சீரமைப்பு பணி முடிவடைய வேண்டிய நிலை உள்ளது.

மேம்பாலத்தின் இருபுறமும் சேவை ரோடு அமைப்பதற்கு அப்பகுதியில் உள்ளோர் இடம் தராத நிலையில் அரசு நிலத்தில் சேவை ரோடு அமைக்குமாறு ஏற்கனவே ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது. இந்தநிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் சேவை ரோடு அமைப்பதற்கு அப்பகுதியில் உள்ளோரிடம் இடம் பெறுவதற்காக மாவட்ட வருவாய் அதிகாரி மூலம் கருத்து கேட்பு கூட்டம், தனிநபர் சந்திப்பு ஆகிய முயற்சிகளை மேற்கொண்டனர்.

ஆனாலும் இப்பிரச்சினையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இடம் கிடைக்காத பட்சத்தில் அரசு நிலத்தில் சேவை ரோடு அமைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேம்பாலத்தின் கிழக்கு பகுதியில் பாலம் தொடங்கும் இடத்தில் ரோட்டின் இருபுறமும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றதன் விளைவாக நெடுஞ்சாலைத்துறை பல்வேறு முரண்பட்ட தகவல்களை கூறிவந்தாலும் இறுதியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் சுரங்கப்பாதை அமைக்க அரசிடம் அனுமதி கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக 8 வாரங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் மாதம் மாநில நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டது. ஆனாலும் நெடுஞ்சாலைத்துறை இதுதொடர்பாக உறுதியான முடிவு ஏதும் அறிவிக்கவில்லை.

இதற்கிடையில் மேம்பாலப்பணி முழுமையாக முடிவடையாத நிலையில் இந்த மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதே நிலைதான் அருப்புக்கோட்டை ரெயில்வே மேம்பால கட்டுமான பணியின்போது ஏற்பட்டது.

விதிமுறைப்படி கட்டி முடிக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வாகன போக்குவரத்திற்கு தகுதி உள்ளது என உறுதிச்சான்று அளிக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் முதல் கட்ட ஆய்வை மட்டுமே முடித்துள்ளனர்.

எனவே மேம்பால கட்டுமான பணி முழுமையாக முடிவடைந்து சேவைரோடு அமைப்பு மற்றும் சுரங்கப்பாதை திட்டப்பணி ஆகியவற்றை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்து, மேம்பாலத்திற்கான உறுதிச்சான்று பெற்ற பின்பு வாகன போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறையிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

அவ்வாறு இல்லாமல் தற்போதே வாகன போக்குவரத்தை அனுமதித்தால் தேவையற்ற பிரச்சினை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.


Next Story