குடியாத்தத்தில் பட்டப்பகலில் துணிகரம்: சைக்கிளில் சென்ற தம்பதியிடம் ரூ.60 ஆயிரம் பறிப்பு - மர்ம நபர்கள் கைவரிசை


குடியாத்தத்தில் பட்டப்பகலில் துணிகரம்: சைக்கிளில் சென்ற தம்பதியிடம் ரூ.60 ஆயிரம் பறிப்பு - மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 1 Nov 2018 3:00 AM IST (Updated: 1 Nov 2018 4:25 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தத்தில் சைக்கிளில் சென்ற தம்பதியிடம் ரூ.60 ஆயிரத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

குடியாத்தம், 

குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 45). இவரது மனைவி பாக்கியலட்சுமி (40). தொழிலாளர்கள். கணவன், மனைவி இருவரும் நேற்று சைக்கிளில் குடியாத்தம் தாலுகா அலுவலகம் அருகே உள்ள ஒரு வங்கியில் ரூ.60 ஆயிரத்தை எடுத்துள்ளனர்.

பின்னர் அதே வங்கியில் அடகு வைத்த நகையை மீட்க கேட்டபோது, மற்றொரு நாளில் வந்து நகையை மீட்டு கொள்ளுமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து கணவன் - மனைவி இருவரும் சைக்கிளில் பணத்துடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென சைக்கிளில் அமர்ந்திருந்த பாக்கியலட்சுமி கையில் இருந்த பணப்பையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கதிரேசன் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பஸ் நிலையம் பகுதியில் வழிப்பறி நடைபெற்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story