3-வது நாளாக வேலைநிறுத்தம்: கருப்பு உடை அணிந்து சத்துணவு ஊழியர்கள் மறியல்; 858 பேர் கைது


3-வது நாளாக வேலைநிறுத்தம்: கருப்பு உடை அணிந்து சத்துணவு ஊழியர்கள் மறியல்; 858 பேர் கைது
x
தினத்தந்தி 1 Nov 2018 3:00 AM IST (Updated: 1 Nov 2018 4:31 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 858 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல், 


காலமுறை ஊதியம், சத்துணவு மானியம் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கடந்த வாரம் முதல் சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், பின்னர் வேலைநிறுத்தத்திலும் பங்கேற்று வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சத்துணவு ஊழியர்கள் திரண்டனர். அதில் ஆண்கள் கருப்பு சட்டையும், பெண்கள் கருப்பு சேலை அணிந்தும் வந்திருந்தனர். பின்னர் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஜெசி, வனிதா ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக சென்றனர். இதனை வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்வலத்தின் முடிவில் திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே சாலை மறியல் நடந்தது. அப்போது காலமுறை ஊதியம், சத்துணவு மானியம் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட நிர்வாகிகள் சத்துணவு ஊழியர்கள் என 858 பேரை போலீசார் கைது செய்தனர். 

Next Story