தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் கர்ப்பிணி சாவு வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்த பரிதாபம்


தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் கர்ப்பிணி சாவு வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்த பரிதாபம்
x
தினத்தந்தி 1 Nov 2018 3:45 AM IST (Updated: 1 Nov 2018 4:35 AM IST)
t-max-icont-min-icon

குன்னத்தூர் அருகே தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார். வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது.


குன்னத்தூர்.

குன்னத்தூர் அருகே உள்ள புதுவலசையை சேர்ந்தவர் ஜீவா (வயது 22). இவர் நியூ திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பூங்கொடிக்கும் (19) கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது 9 மாத கர்ப்பிணியான பூங்கொடிக்கு நேற்றுமுன்தினம் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே குன்னத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பூங்கொடிக்கு நேற்று மாலை திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து அங்குள்ள மருத்துவர்கள் போதிய மருத்துவ வசதிகள் இல்லையென்றும், அதனால் தங்களால் சிகிச்சை அளிக்க முடியாது என்றுகூறி, மேல்சிகிச்சைக்காக பூங்கொடியை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்கள். இதனையடுத்து பூங்கொடியை திருப்பூர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர்.

ஆனால் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே பூங்கொடி பரிதாபமாக இறந்தார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது. இது குறித்து பூங்கொடியின் கணவர் ஜீவா அளித்த புகாரின் பேரில் குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குன்னத்தூர் பகுதியில் கர்ப்பிணி பெண் வயிற்றில் குழந்தையுடன் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story