தனுஸ்ரீதத்தாவிடம் “25 பைசா” இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு : நடிகை ராக்கி சாவந்த் தாக்கல் செய்தார்


தனுஸ்ரீதத்தாவிடம் “25 பைசா” இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு : நடிகை ராக்கி சாவந்த் தாக்கல் செய்தார்
x
தினத்தந்தி 1 Nov 2018 4:43 AM IST (Updated: 1 Nov 2018 4:43 AM IST)
t-max-icont-min-icon

தனுஸ்ரீ தத்தாவிடம் “25 பைசா” இழப்பீடு கேட்டு நடிகை ராக்கி சாவந்த் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

மும்பை,

காலா படத்தில் நடித்தவரும், பிரபல இந்தி நடிகருமான நானா படேகர் 2008-ம் ஆண்டு நடந்த ஒரு படப்பிடிப்பில் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக, பாலியல் புகார் கூறி இந்தி திரையுலகில் நடிகை தனுஸ்ரீதத்தா பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்தப் புகாருக்கு நானா படேகர் மறுப்பு தெரிவித்தார். மேலும் தனது வக்கீல் மூலம் தன்னை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடிகைக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், தனுஸ்ரீ தத்தா நானா படேகருக்கு எதிராக மும்பை போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே நடிகர் நானா படேகருக்கு ஆதரவாக நடிகை ராக்கி சாவந்த் களம் இறங்கினார். இவர் ‘தனுஸ்ரீ தத்தா ஒரு பொய்யர்' எனக் கூறியதுடன், அவர் போதைக்கு அடிமையானவர். ஓரின சேர்க்கையாளர். என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இது தொடர்பாக ராக்கி சாவந்துக்கு எதிராக ரூ 10 கோடி கேட்டு ஒரு அவதூறு வழக்கை தனுஸ்ரீ தத்தா தொடர்ந்து உள்ளார்.

மேலும் சமீபத்தில் தனுஸ்ரீ தத்தா அளித்த பேட்டியிலும் ராக்கி சாவந்தை கடுமையாக தாக்கி பேசியதாக தெரிகிறது. இந்த நிலையில் தனுஸ்ரீ தத்தாவிடம் “25 பைசா” இழப்பீடு கேட்டு ராக்கி சாவந்த் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதில் “ நான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறேன். சமீப காலமாக தனுஸ்ரீ தத்தா கூறி வரும் மோசமான மற்றும் இழிவுபடுத்தும் பேச்சுகளால் எனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டதுடன், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். இதை மீண்டும் ஈடுசெய்ய பல ஆண்டுகள் ஆகும்.

எனவே எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய தனுஸ்ரீதத்தா “25 பைசா” இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் ஊடகங்கள் முன் பகிரங்கமாக மன்னிப்பு கோர கோர்ட்டு உத்தரவிட வேண்டும்” என கூறியுள்ளார். 

Next Story