கிராம நிர்வாக அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்: தாலுகா அலுவலகத்தில் மடிக்கணினிகளை ஒப்படைத்தனர்
திண்டுக்கல் மாவட்டத்தில் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்திய, கிராம நிர்வாக அலுவலர்கள் தாலுகா அலுவலகங்களில் மடிக்கணினி, சிம்கார்டுகளை ஒப்படைத்தனர்.
திண்டுக்கல்,
வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் வருமான சான்று, சாதிச்சான்று, முதல் பட்டதாரி சான்று உள்பட பல்வேறு சான்றுகள் தமிழ்நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பொதுசேவை மையங்கள் செயல்படுகின்றன. அவற்றின் மூலம் பொதுமக்கள் விண்ணப்பித்து, குறிப்பிட்ட நாட்களில் சான்றுகளை பெற்று கொள்ளலாம்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலத்துக்கான அடங்கல் சான்றையும், ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது. இதர சான்றுகளை பொறுத்தவரை கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் என 3 பேர் சரிபார்த்து கையெழுத்திட வேண்டும். ஆனால், அடங்கலை பொறுத்தவரை கிராம நிர்வாக அலுவலரால் மட்டுமே வழங்கப்படுகிறது.
இதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்தால் தேவையற்ற காலதாமதம் ஏற்படும் என்று, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆன்லைனில் அடங்கல் சான்று வழங்கும் பணியை புறக் கணித்து வருகின்றனர். மேலும் ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் 230 கிராம நிர்வாக அலுவலர்களும் நேற்று விடுப்பு எடுத்தனர். மேலும் அரசு பணிகளை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகள், செல்போன் சிம்கார்டுகள் ஆகியவற்றை அந்தந்த தாலுகா அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஒப்படைத்தனர். கிராம நிர்வாக அலுவலர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்ததால், சான்றுகள் வழங்குதல் உள்பட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.
இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் லோகநாதன் கூறுகையில், அடங் கலை பொறுத்தவரை மக்கள் நேரடியாக கிராம நிர்வாக அலுவலகம் வந்து வாங்குவார்கள். ஆனால், ஆன்லைனில் பெற வேண்டும் என்றால், தேவையில்லாமல் தாமதம் ஏற்படும்.
எனவே, அதை ரத்து செய்ய வேண்டும். இதேபோல் கிராம நிர்வாக அலுவலர் களுக்கு வழங்கிய மடிக்கணினிகளுக்கு புதிய மென்பொருளை கொடுப்பதில்லை. அனைவரும் சாதாரணமாக 4 ஜி சிம்கார்டை பயன்படுத்தும் நிலையில், எங்களுக்கு 2 ஜி சிம்கார்டு கொடுத்துள்ளனர். இதுபோன்ற பல்வேறு குறைபாடுகளை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம், என்றார்.
Related Tags :
Next Story