அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை உயர்ந்து வருகிறது - அமைச்சர் கமலக்கண்ணன் பெருமிதம்


அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை உயர்ந்து வருகிறது - அமைச்சர் கமலக்கண்ணன் பெருமிதம்
x
தினத்தந்தி 1 Nov 2018 12:18 AM GMT (Updated: 1 Nov 2018 12:18 AM GMT)

புதுச்சேரி மாநிலத்தில் தான் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை உயர்ந்து வருகிறது என அமைச்சர் கமலக்கண்ணன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல் நிலைப்பள்ளியில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி கடந்த 29–ந் தேதி தொடங்கியது. இதன் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா நேற்று மாலை நடந்தது.

பள்ளி கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு வரவேற்றார். டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் முன்னிலை வகித்தார்.

விழாவில் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு சான்றிதழ், கோப்பைகள் வழங்கி பாராட்டினார்.

விழாவில் அமைச்சர் கமலக்கண்ணன் பேசியதாவது:–

புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களை போல் கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப பள்ளிகளிலும் மாணவ–மாணவிகள் மிகவும் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்கள். இது ஆசிரியர்களின் புரட்சி என்று கூறுவேன்.

அகில இந்திய அளவில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி மாநில அரசு பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை 10 முதல் 15 சதவீதம் உயர்ந்துள்ளது.

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த ஆசிரியர்களிடம் கருத்துகளை கேட்டறிந்து அரசு பள்ளிகளிலும் மாதம் ஒருமுறை மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து அவர்களின் குழந்தைகளின் கற்கும் திறன், ஆர்வம் ஆகியவற்றை எடுத்துரைத்து வருகிறோம். இதனால் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டும் பெற்றோர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story