தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் இன்பதுரை எம்.எல்.ஏ. தகவல்
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் இன்பதுரை எம்.எல்.ஏ. கூறினார்.
நெல்லை,
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் இன்பதுரை எம்.எல்.ஏ. கூறினார்.
ஆய்வுக்கூட்டம்
தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழு ஆய்வுக்கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் இன்பதுரை எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். கலெக்டர் ஷில்பா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில், சட்டமன்றத்தில் உறுதி அளித்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்பதுரை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பொதுமக்களுக்கு அளிக்கும் உறுதிமொழிக்குரிய பணிகளின் மேம்பாடுகள் குறித்து எழும் வினாக்கள் மீது அனைத்து துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு, பணிகளின் மேம்பாட்டிற்குரிய ஆலோசனை வழங்கப்பட்டது. ஏற்கனவே தாமிரபரணி கருமேனியாறு இணைப்பு திட்டப்பணிகள், திசையன்விளை மனோ கல்லூரி கட்டுமான பணிகள், உவரி தூண்டில் வளைவு உள்ளிட்ட பகுதிகளில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூடங்குளம் அணுமின் நிலைய சுற்றுப்புற மேம்பாட்டு பணிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையம்
மேலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர்வாசிகள் மற்றும் இடம் கொடுத்தவர்கள் வேலைவாய்ப்பு பெறுவது குறித்து அணுமின்நிலைய அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டு உரிய ஆலோசனை வழங்கப்பட்டது. உறுதிமொழி மீதான 206 வினாக்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட வேண்டிய பணிகளுக்கு உரிய கால அவகாசம் கொடுத்து முடித்திட உறுதிமொழி பெறப்பட்டுள்ளது. தாமிரபரணி கருமேனியாறு இணைப்பு திட்டப்பணிகள் வருகிற 2020-க்குள் முடிக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
கூடங்குளம் அணுமின்நிலையத்தில் 1, 2-வது அணுஉலையில் இருந்து எடுக்கப்படுகின்ற மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்குவது போல், 3, 4-வது அணுஉலை திட்டப்பணிகள் முடிந்து மின்உற்பத்தி தொடங்கும்போது தமிழகத்திற்கு உரிய மின்சாரம் வழங்கப்படும். இதை தமிழக அரசு கேட்டுப்பெறும். அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
நடவடிக்கை
நெல்லை மாநகர பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக நெல்லை மாநகரம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. அப்போது முழுமையாக பாதாளசாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு ஆற்றில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும். சுரண்டை பகுதியில் உள்ள செண்பக நதியிலும் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும். ஆற்றில் கழிவு நீரை விடுகின்ற மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கூட்டத்திற்கு வராத ஒரு அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் ராமஜெயலிங்கம் (ஜெயங்கொண்டம்), மனோரஞ்சிதம் (ஊத்தங்கரை), மனோகரன் (வாசுதேவநல்லூர்), முருகையா பாண்டியன் (அம்பை), செல்வமோகன்தாஸ் பாண்டியன் (தென்காசி), தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழு செயலாளர் சீனிவாசன், சார்பு செயலாளர் சுப்பிரமணியன், நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர்கள் மணிநாரணவரே, ஆகாஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story