திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா ஏற்பாடுகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு


திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா ஏற்பாடுகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு
x
தினத்தந்தி 1 Nov 2018 10:30 PM GMT (Updated: 1 Nov 2018 1:21 PM GMT)

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா ஏற்பாடுகளை நேற்று கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா ஏற்பாடுகளை நேற்று கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார். 

 கந்தசஷ்டி திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 8–ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. விழா நாட்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கி, விரதம் இருந்து வழிபடுவார்கள். 6–ம் நாளான 13–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறும். இதனை முன்னிட்டு கோவிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

அடிப்படை வசதிகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் 10 லட்சத்துக்கு அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோவில் வளாகத்தில் விரதம் இருக்கும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக 8 இடங்களில் இரும்பு தகடாலான மேற்கூரைகளுடன் கூடிய தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

அங்கு குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்படுகிறது. ஒவ்வொரு கூடாரத்திலும் 5 ஆயிரம் பக்தர்கள் தங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கோவில் வளாகத்தில் 20 இடங்களில் தலா 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படும். மேலும் 100 தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்படும். கோவில் கிரிப்பிரகாரத்தில் இரும்பு தகடாலான தற்காலிக மேற்கூரை அமைக்கப்படும்.

தயார் நிலையில்...

சூரசம்ஹார நிகழ்ச்சியை பக்தர்கள் எளிதில் காணும் வகையில், 10 இடங்களில் 10 அடி நீளம், 8 அடி அகலம் கொண்ட பெரிய திரைகள் அமைக்கப்படும். 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். கடற்கரை முழுவதும் தடுப்பு கம்புகள் அமைக்கப்படும். கோவில் வளாகத்தில் 24 மணி நேரமும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருப்பார்கள். ஆம்புலன்சு வாகனம், தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் இருக்கும். திருச்செந்தூர் நகரிலும், புறநகரிலும் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லாமல் இருந்தது. தற்போது மழைக்காலம் தொடங்கியதால் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் தலா 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 1,500 சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். பன்றி காய்ச்சலுக்கு தேவையான 20 ஆயிரம் மாத்தரைகள் தயாராக வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோவிந்தராசு, தாசில்தார் தில்லைப்பாண்டி, கோவில் இணை ஆணையர் பாரதி, நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் (பொறுப்பு) வெள்ளைச்சாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

அன்னதானம் வழங்க...

பின்னர் கோவில் இணை ஆணையர் பாரதி நிருபர்களிடம் கூறியதாவது:–

கோவில் வளாகத்தில் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு இடையூறாக, கண்ட இடங்களில் அன்னதானம் வழங்க தடை செய்யப்பட்டு உள்ளது. கோவில் நிர்வாகம் சார்பில், கோவில் அன்னதான மண்டபத்தில் தினமும் மதியம் 12 மணியில் இருந்து 1.30 மணி வரையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

எனவே இந்த நேரம் தவிர மற்ற நேரத்தில் கோவில் அன்னதான மண்டபத்தில் பக்தர்கள் அன்னதானம் வழங்க பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் ஒரு இடத்திலும் பக்தர்கள் அன்னதானம் வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து தர தயாராக உள்ளது. அன்னதானம் வழங்க விரும்பும் பக்தர்கள் உணவு பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற்று, கோவில் நிர்வாகத்தை அணுகினால், அவர்கள் அன்னதானம் வழங்க குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story