மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம் ரத்து: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சசிகலா புஷ்பா எம்.பி. திடீர் தர்ணா


மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம் ரத்து: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சசிகலா புஷ்பா எம்.பி. திடீர் தர்ணா
x
தினத்தந்தி 2 Nov 2018 3:30 AM IST (Updated: 1 Nov 2018 7:12 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், கலெக்டர் அலுவலகத்தில் சசிகலா புஷ்பா எம்.பி. நேற்று திடீர் தர்ணா போராட்டம் நடத்தினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், கலெக்டர் அலுவலகத்தில் சசிகலா புஷ்பா எம்.பி. நேற்று திடீர் தர்ணா போராட்டம் நடத்தினார். அதிகாரியை அவர் ஒருமையில் பேசியதாக கூறி அரசு ஊழியர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

கூட்டம் ரத்து

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மத்திய அரசு திட்டங்கள் குறித்த கண்காணிப்புக்குழு கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. கண்காணிப்புக்குழுவின் தலைவர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி, துணைத்தலைவர் சசிகலாபுஷ்பா எம்.பி. ஆவர். இந்த கூட்டம் தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள், அனைத்து அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று காலை முதல் அனைத்து அதிகாரிகளும் கூட்ட அரங்கில் காத்து இருந்தனர்.

ஆனால், காலை 10–45 மணிக்கு குழு தலைவர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி. உடல்நலக் குறைவு காரணமாக வர இயலாததால், கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

சசிகலா புஷ்பா தர்ணா

அதே நேரத்தில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக துணைத்தலைவர் சசிகலா புஷ்பா எம்.பி. காலை 10–55 மணிக்கு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு எந்த அதிகாரிகளும் இல்லை. தொடர்ந்து கூட்டம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா புஷ்பா எம்.பி. திடீரென கூட்டம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் மற்றும் அதிகாரிகள், சசிகலா புஷ்பா எம்.பி.யிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சசிகலாபுஷ்பா எம்.பி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் திட்ட இயக்குனரை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் கலெக்டர் அலுவலகத்தில் பணியில் இருந்த ஊழியர்களிடையே பரவியது.

ஆர்ப்பாட்டம்

உடனடியாக கலெக்டர் அலுவலக அனைத்து பணியாளர்களும் பணிகளை புறக்கணித்து கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். அவர்கள் சசிகலாபுஷ்பா எம்.பி. மற்றும் அவருடைய ஆதரவாளர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட இயக்குனர்கள் தேவிகா, விநாயகசுப்பிரமணியன் ஆகியோர் சம்பவம் குறித்து விளக்கி பேசினர்.

அப்போது, ‘‘அதிகாரியை ஒருமையில் பேசியதுடன் கலெக்டரையும் விமர்சித்து பேசிய சசிகலாபுஷ்பா எம்.பி மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்துவார்கள்‘‘ என்று கூறினார்கள். தொடர்ந்து அரசு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சசிகலாபுஷ்பா எம்.பி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் ஹென்றிதாமஸ் மற்றும் ஆதரவாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

அதிகாரிகள் இல்லை

முன்னதாக சசிகலாபுஷ்பா எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய அரசு திட்டங்கள் குறித்த கண்காணிப்பு குழு கூட்டம் இன்று (அதாவது நேற்று) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கண்காணிப்பு குழுவின் துணைத்தலைவரான என்னை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, கலெக்டர் கடிதம் அனுப்பி இருந்தார். அதன்பேரில் எனது அனைத்து பணிகளையும் விடுத்து, கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்தேன். இங்கு வந்தால் கலெக்டரை காணவில்லை. தலைவர், எம்.எல்.ஏ.க்களை காணவில்லை. கூட்டம் ரத்து செய்யப்பட்ட விவரம் எதுவும் எனக்கு தெரிவிக்கப்படவில்லை. துணைத்தலைவராகிய என்னால் கூட்டம் நடத்த முடியும். ஆனால் அதிகாரிகள் யாரும் இல்லை.

இந்த கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை, மர்ம காய்ச்சல் பரவுவது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பதை ஆய்வு செய்ய வந்தேன். ஆனால், மக்கள் பணியை ஒழுங்காக செய்யாமல் இங்கிருந்து சென்று விட்டார்கள். அதிகாரிகள் எங்களை சத்தம் போடுகிறார்கள். பெண் என்றும் பாராமல் அவமானப்படுத்தினர். கலெக்டர் அலுவலக ஊழியர்களை வைத்து கோ‌ஷம் போடுகிறார்கள். எனக்கு தனிப்பட்ட எதிரி யாரும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story