சங்கரன்கோவில்–மானூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சங்கரன்கோவில் மற்றும் மானூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சங்கரன்கோவில்,
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சங்கரன்கோவில் மற்றும் மானூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் யூனியன் அலுவலகத்தில் வைத்து சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்கவேண்டும், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிர்வாகிகள் ஈஸ்வரன், புஷ்ப வள்ளி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட இணை செயலாளர் பீட்டர் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் மைதீன் பட்டாணி, செயலாளர் வேல்ராஜன், சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் ராஜையா, காமராஜ் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். குருவிகுளம் ஒன்றிய செயலாளர் கனகராஜ் நன்றி கூறினார்.
மானூரில் ஆர்ப்பாட்டம்
இதேபோல் மானூர் யூனியன் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதிய சத்துணவு அமைப்பாளருக்கு ரூ. 5 லட்சமும், உதவியாளருக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும். 21 மாத நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோமதி தலைமை தாங்கினார். சிராஜீதீன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட பொருளாளர் வீரராஜ், ஒன்றிய சங்க துணைதலைவர் மருதுபாண்டி உள்பட சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். கோபால் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story