அன்னவாசல் பகுதியில் கல் உரல் விற்பனை அமோகம் ஆர்வத்துடன் வாங்கும் பொதுமக்கள்
அன்னவாசல் பகுதியில் கல் உரல் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.
அன்னவாசல்
பெரும் பாலும் வீடுகளில் மாவு, சட்னி போன்றவை அரைப்பதற்கு நவீன எந்திரங்கள் அதிக அளவு வந்துள்ளது. இதனால் பாரம்பரியமிக்க அம்மிக்கல், ஆட்டுக்கல் உற்பத்தி தொழில் நலிவை சந்தித்து வந்தது. இருப்பினும் மின்தடையின் போது அம்மி, ஆட்டுக்கல், உரல் போன்ற பழமையான சாதனங்களை நாடுகின்றனர். இதனால் சமீப காலமாக மினி உரல்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியில் தள்ளுவண்டியில் விற்கப்படும் கல் உரலை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
கல் உரல் வாங்கிய பொதுமக்கள் கூறுகையில், அம்மியில் மசாலா அரைச்சு குழம்பு வைப்பதாலும், ஆட்டுக்கல்லில் மாவு அரைத்து இட்லி சுட்டு சாப்பிடுவதிலும் உள்ள ருசியே தனி. அதெல்லாம் இந்த கால பிள்ளைகளுக்கு தெரியாமல் போனது வருத்தமா இருக்கு. அம்மியிலும், ஆட்டுக்கல்லிலும் அரைத்து சமைத்து சாப்பிட்ட வரை மக்கள் ஆரோக்கியமாக தான் இருந்தாங்க. அதெல்லாம் இப்போ மறக்கடிக்கப்பட்டதால், நீரிழிவு, ரத்த அழுத்தம் என்று கண்ட நோய்கள் வந்து ஆட்டி படைக்குது என்றார்.
இது குறித்து உரல், அம்மிக்கல் வியாபாரிகள் கூறியதாவது:-
கிராமங்களில் மட்டுமே பெரிய அளவிலான உரல், அம்மிக்கல் விற்பனையாகிறது. நகர் புறங்களில் விற்பனை குறைந்து விட்டதால் வருமானம் குறைந்து விட்டது. ஆனால், சில நேரங்களில் மின்தடை காரணமாக எங்கள் தொழிலுக்கு மவுசு அதிகரிக்கிறது. நகர் புறங்களில் அடுக்குமாடி கட்டிடங்களில் வசிப்பவர்களும், வாடகை வீட்டில் வசிப்பவர்களும் பெரிதாக உள்ள அம்மி, ஆட்டுக்கல்லை வீட்டில் வைக்க முடியாது.
எனவே, அவர்கள் உபயோகப்படுத்தும் வகையில் சிறிய அளவிலான கல் உரலை உருவாக்கி விற்பனை செய்தோம். இந்த உரல்களுக்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு உரல் ரூ.150 முதல் ரூ.250 வரை விற்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்
Related Tags :
Next Story