பழனியில் பரபரப்பு: ஓய்வு பெற்ற கோவில் ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்க லஞ்சம்? போலீசார் நடத்திய சோதனையில் ரூ.34 ஆயிரம் பறிமுதல்


பழனியில் பரபரப்பு: ஓய்வு பெற்ற கோவில் ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்க லஞ்சம்? போலீசார் நடத்திய சோதனையில் ரூ.34 ஆயிரம் பறிமுதல்
x
தினத்தந்தி 2 Nov 2018 3:15 AM IST (Updated: 2 Nov 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வு பெற்ற கோவில் ஊழியர்களுக்கு, சான்றிதழ் வழங்குவதற்காக லஞ்சம் கொடுப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய சோதனையில் ரூ.34 ஆயிரம் சிக்கியதால் பழனியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பழனி, 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் பணியாற்றி, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, இந்து சமய அறநிலையத்துறைக்கு ஆண்டுதோறும் ஆளறி சான்றிதழை ஊழியர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆளறி சான்று வழங்குவதற்கான நேர்காணல், ஒவ்வொரு ஆண்டும் பழனி தண்டபாணி நிலையத்தில் நடத்தப்படுவது வழக்கம். இந்த சான்றிதழ் பெற்று தருவதற்கு, ஓய்வு பெற்ற பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் பணம் வழங்கப்படுவதாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனால் ஆளறி சான்றிதழுக்கான நேர்காணல் நடைபெறும் போது அதிரடி சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி நேற்று பழனி தண்டபாணி நிலையத்தில் ஆளறி சான்றிதழுக்கான நேர்காணல் முகாம் நேற்று நடந்தது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சத்யசீலன் தலைமையிலான போலீசார் நேற்று பழனிக்கு வந்தனர்.

தண்டபாணி நிலையத்தில் நேர்காணல் முகாம் நடக்கும் இடத்துக்கு சென்ற போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த பழனி முருகன் கோவில் ஓய்வு பெற்ற பணியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.34 ஆயிரம், ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கேட்டபோது, ஓய்வுபெற்ற பணியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகளிடம் இருந்து பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த பணம், ஆவணங்களுக்கு சங்க நிர்வாகிகள் சார்பில் உரிய விளக்கம் அளிக்கும் பட்சத்தில் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்றனர்.

இது தொடர்பாக பழனி முருகன் கோவில் ஓய்வுபெற்ற பணியாளர்கள் நலச்சங்க செயலாளர் கோபால் கூறும்போது, திண்டுக்கல் அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம் தலைமையில் ஓய்வு பெற்ற பணியாளர்களின் ஆளறி சான்றிதழுக்கான நேர்காணல் நடந்தது. இந்த முகாமில் ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவரும் கலந்துகொள்வார்கள் என்பதால், சங்கத்துக்கான ஆண்டு சந்தா தொகையான ரூ.100-ஐ ஒவ்வொரு உறுப்பினரிடம் இருந்தும் வசூலிக்கப்படும்.

அதற்கான ரசீது, ஆவணங் கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பறிமுதல் செய்தது, சங்கத்துக்கான சந்தா தொகை ஆகும். சங்க உறுப்பினர்கள் அல்லாத சிலர், ஆளறி சான்றிதழ் நேர்காணலின் போது தங்களிடம் பணம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே இன்று (அதாவது நேற்று) லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். மற்றபடி இந்த சோதனைக்கும், கோவில் அதிகாரிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.

சான்றிதழ் வழங்குவதற்கான நேர்காணல் முகாமில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story