கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
x
தினத்தந்தி 2 Nov 2018 4:15 AM IST (Updated: 2 Nov 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

கரூர், 
தாந்தோணிமலையில் கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள், 2 சக்கர வாகனங்கள் உரிமம் புதுப்பித்தல், ஓட்டுனர் உரிமம் பெறுவது, ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், பெயர் மாற்றம், பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆகியவற்றிற்கு தரச்சான்றிதழ் வழங்குவது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில் பல முறைகேடுகள் நடப்பதாக திருச்சி லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரத்தினவள்ளி, சுலோச்சனா ஆகியோர் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று மதியம் 2 மணி அளவில் தாந்தோணிமலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்தனர்.

அப்போது அலுவலகத்தின் உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்ல முடியாத வகையிலும், வெளியில் இருப்பவர்கள் உள்ளே வர முடியாதபடி அனைத்து கதவுகளையும் பூட்டிக்கொண்டு அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை சோதனையிட்டு வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளர்கள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு போலீசாரை கண்டதும் இடைத்தரகர்கள் சுவர் ஏறி குதித்து தப்பியோடினர். நேற்று கரூர் வட்டார போக்குவரத்து அலுவலர் விடுமுறையில் சென்ற நிலையில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. மதியம் 2 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 7 மணி வரை நீடித்தது. இதில் பல ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கேட்டபோது அவர்கள் விவரம் கூற மறுத்துவிட்டனர். இந்த சோதனையால் கரூர் வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story