தொழில் நிறுவனங்கள் அரசு சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம் கலெக்டர் அன்பழகன் தகவல்
தொழில் நிறுவனங்கள் அரசு சலுகைகளை பயன் படுத்தி கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் அன்பழகன் கூறினார்.
கரூர்,
கரூர் ரெசிடன்சியல் ஓட்டலில் இந்திய தொழில் கூட்டமைப்பு மாவட்ட தொழில் மையம் இணைந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்குதல் மற்றும் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உலகளவில் தங்களுக்கான இடத்தை பிடித்துள்ளனர். இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் திருப்பூரில் ஜவுளி நிறுவனமும், சிவகாசியில் பட்டாசு உற்பத்தியும், ஆம்பூரில் லெதர் தயாரிப்புகளும், சென்னையில் ஆட்டோ தயாரிப்புகளும் என சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சிறு, குறு தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கும் முறை 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை அப்போதைய காலச்சுழலுக்கு ஏற்ற முறையில் இருந்தது. இது சிரமமான நடை முறையாக இருந்துவந்தது.
ஆனால் இளைஞர் களுக்கும், தொழில் தொடங்க ஆர்வமுள்ள நபர்களுக்கும் நம்பிக்கையூட்டும் வகையில் தற்போது அனைத்து நடைமுறைகளையும் ஆன்லைன் முறையில் எளிமையாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்டவர்களுக்கு உரிமம் உரிய காலத்தில் வழங்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால் விரைவாக தங்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். இந்திய அளவில் 12 வங்கிகள் தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்க தயாராக உள்ளன.
நன்கு வளர்ச்சியடைந்த தொழில் நிறுவனங்கள் நன்றியுணர்வுடன் சிறிய தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவிட தயாராக உள்ளார்கள். அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பாலித்தீன் தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக பாக்குமட்டை தொழில் வளர்ச்சியடைந்து வருகிறது. தற்போது சூரிய மின்சக்தி அவசிய தேவையாகிவிட்டது. வளர்ச்சியடைந்த தொழில் நிறுவனங்கள் அனைத்தும் கால சூழ்நிலைக்கேற்றாற்போல் தங்கள் தயாரிப்புகளை மாற்றிக்கொண்டதன் காரணமாகவே வளர்ச்சியடைந்துள்ளன. அதேபோல் உங்களுடைய தயாரிப்புகளும் தரமானதாகவும், காலத்துக்கேற்றதாகவும் இருந்தால் நல்ல வளர்ச்சி அடைய முடியும்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் தேவைகள் என்ன என்பதை தெரிவித்து அதிலுள்ள தடைகளை நீக்கி அரசு வழங்கும் நிலம் மின் இணைப்பு, வட்டி மானியம், தொழில்நுட்ப வசதி, போக்குவரத்து வசதி போன்ற சலுகைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இன்றைய நிகழ்வில் இத்துறை சார்ந்த வல்லுநர்கள் தரும் கருத்துக்களை உள்வாங்கி, உங்களுக்குரிய சந்தேகங்களை முழுமையாக கேளுங்கள், முயற்சி செய்யுங்கள், வாழ்வில் முன்னேறுங்கள். நீங்கள் வாழ்வில் நல்ல வளர்ச்சியடைய வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ரமேஷ், இந்திய தொழில் கூட்டமைப்பு கரூர் மாவட்ட தலைவர் நல்லமுத்து, ஆளுநர் கோபால், துணைத்தலைவர் முருகானந்தம், சிறு- குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஆளுநர் சங்கர், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, கரூர் வட்டாட்சியர் ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story