கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை - கணக்கில் வராத ரூ.4¼ லட்சம் பறிமுதல்


கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை - கணக்கில் வராத ரூ.4¼ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 2 Nov 2018 3:45 AM IST (Updated: 2 Nov 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ. 4 லட்சத்து 33 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

கடலூர், 

தீபாவளி பண்டிகையையொட்டி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் மாமூல் வசூலிக்கப்படுவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குனருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், டாஸ்மாக் அலுவலகங்கள், அறநிலையத்துறை அலுவலகங்கள், மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்கள் மற்றும் ஆவின் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இதேபோல் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். இதையொட்டி நேற்று மதியம் சுமார் 1 மணி அளவில் கடலூர் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மெல்வின் ராஜாசிங் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சதீஷ், திருவேங்கடம் உள்ளிட்ட போலீசார் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்தனர்.

அப்போது அங்கு ஓட்டுனர் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ், உரிமம் புதுப்பித்தல் போன்ற பணிகளுக்காக காத்திருந்த பொதுமக்களை மட்டும் போலீசார் வெளியில் அனுப்பி விட்டு இடைத்தரகர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களை அலுவலகத்துக்குள் வைத்து கதவை பூட்டிக்கொண்டு சோதனையில் ஈடுபட்டனர்.

மோட்டார் வாகன ஆய்வாளர்களின் அறை, அலுவலக ஊழியர்களின் மேஜை, டிராயர்கள் மற்றும் பீரோக்களில் கணக்கில் காட்டப்படாத பணம் உள்ளதா? என சோதனையிட்டனர். அதேப்போல் அங்கிருந்த 15 இடைத்தரகர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள்.

மேலும் அங்கிருந்த ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.4 லட்சத்து 33 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர 40 ஆவணங்களும் சிக்கின. மேலும் இடைத்தரகர்களிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஓட்டுனர் உரிமங்களும், 60 ஆர்.சி. புத்தகங்களும் கைப்பற்றப்பட்டன.பின்னர் இரவு சுமார் 10 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையை முடித்துக்கொண்டு, கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களுடன் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தனர். இந்த திடீர் சோதனை கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story