தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் 3 தற்காலிக பஸ் நிலையங்கள் திறப்பு


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் 3 தற்காலிக பஸ் நிலையங்கள் திறப்பு
x
தினத்தந்தி 2 Nov 2018 4:15 AM IST (Updated: 2 Nov 2018 1:50 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் 3 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் திறக்கப்பட்டன.

திருச்சி, 

தீபாவளி பண்டிகை வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான 5-ந்தேதி தமிழகத்தில் விடுமுறை தினமாக அரசு அறிவித்துள்ளது. வெளியூர்களில் தங்கி வசிப்பவர்கள் தீபாவளி பண்டிகைக்கு தங்களது சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவது வழக்கம்.

திருச்சியில் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பண்டிகை நேரத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும். பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வந்து செல்வதில் சிரமம் ஏற்படும். இதனை தவிர்ப்பதற்காக சில ஆண்டுகளாக தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் 3 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் சோனா மீனா தியேட்டர் அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகேயும், புதுக்கோட்டை மார்க்கமாக செல்லக்கூடிய பஸ்கள், மன்னார்புரம் பழைய இலுப்பூர் சாலையில் இருந்தும், மதுரை மார்க்க பஸ்கள், மன்னார்புரம் மதுரை அணுகுசாலையில் இருந்தும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி 3 இடங்களிலும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. தகர கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்காலிக பஸ் நிலையங்கள் நேற்று முதல் செயல்பட தொடங்கின. மன்னார்புரம் மதுரை அணுகுசாலையில் தற்காலிக பஸ் நிலையத்தில் பஸ் போக்குவரத்தை மாநகர துணை போலீஸ் கமிஷனர் மயில்வாகனன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கழக அதிகாரிகள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர். தற்காலிக பஸ் நிலையங்கள் வருகிற 11-ந்தேதி வரை செயல்படும். மன்னார்புரம் பகுதியில் இருந்து மத்திய பஸ் நிலையத்திற்கு சென்று வர டவுன் பஸ் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Next Story