பயணிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதால் திருச்சி ஜங்ஷன் பசுமை ரெயில் நிலையமாக அறிவிப்பு


பயணிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதால் திருச்சி ஜங்ஷன் பசுமை ரெயில் நிலையமாக அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Nov 2018 4:30 AM IST (Updated: 2 Nov 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

பயணிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதால் திருச்சி ஜங்ஷன் பசுமை ரெயில் நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி,
தெற்கு ரெயில்வேயில் திருச்சி கோட்டம் முக்கியமானதாகும். திருச்சி கோட்டத்தின் தலைமையிடமான திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ளது. திருச்சியில் இருந்து சென்னை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர், மதுரை ஆகிய 5 மார்க்கங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு தினமும் சராசரியாக 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். பண்டிகை காலங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகும்.

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் போதுமானதாக இருந்தாலும், இதனை மேலும் மேம்படுத்தும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் பசுமை ரெயில் நிலையமாக மாற்றவும் பணிகள் நடந்தது.

அந்தவகையில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் மின்சாரத்தை சேமிக்க சூரிய ஒளி மின்சாரம், பயணிகள் அமருவதற்கான இருக்கை வசதிகள், ரெயில் நிலைய கட்டிடங்களை அழகுபடுத்த வண்ணமிகு ஓவியங்கள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் ரெயில் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் உள்ளிட்டவை நடப்பட்டுள்ளன. பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்திய தொழில் கூட்டமைப்பு நிறுவனத்தினர் மற்றும் தனியார் அமைப்பு நிர்வாகிகள், கடந்த சில நாட்களுக்கு முன்பு பசுமை ரெயில் நிலையம் சான்றிதழ் வழங்குவதற்காக, திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது ரெயில் நிலையத்திற்கு அதிகாரிகள் மதிப்பீடு வழங்கினர்.

இதையடுத்து திருச்சி ஜங்ஷனை ‘பசுமை ரெயில் நிலையம்‘ ஆக, ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதற்கான சான்றிதழ் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் விரைவில் வழங்கப்பட உள்ளதாக ரெயில்வே வட்டாரத்தில் தெரிவித்தனர். மேலும் ரெயில் நிலையங்களை ‘ஏ‘ 1, ‘ஏ‘ என பல்வேறு தரவரிசையாக பிரிப்பது உண்டு.

அந்த வகையில் இந்தியன் ரெயில்வேயில் ‘ஏ‘ தரவரிசையில் அமைந்துள்ள ரெயில் நிலையங்களில், திருச்சி ஜங்ஷன் முதலாவதாக ‘பசுமை ரெயில் நிலையம்‘ என சான்றிதழ் பெற்றுள்ளதாக திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story