கோவையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: விசாரணையின் போது மயங்கி விழுந்து வாகன ஆய்வாளர் சாவு - கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல்


கோவையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: விசாரணையின் போது மயங்கி விழுந்து வாகன ஆய்வாளர் சாவு - கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 2 Nov 2018 3:30 AM IST (Updated: 2 Nov 2018 2:04 AM IST)
t-max-icont-min-icon

கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தி ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அப்போது வாகன ஆய்வாளரிடம் விசாரணை நடத்தியபோது மயங்கி விழுந்து இறந்தார். கோவையில் நேற்று நடந்த இந்த பரபரப்பான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கோவை, 

கோவை பாலசுந்தரம் சாலையில் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் வட்டார போக்குவரத்து அதிகாரி மாறுதல் ஆகி சென்று விட்டார். இந்த அலுவலகத்தின் பொறுப்பை கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி கவனித்து வருகிறார். இந்த நிலையில் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தீபாவளி வசூல் வேட்டை நடப்பதாகவும், வெளி ஆட்கள் பலர் பணம் கொண்டு வந்து ஊழியர்களுக்கு கொடுப்பதாகவும் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் சாதாரண உடையில் ஒரு வேனில் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நேற்று பகல் 12.30 மணியளவில் வந்தனர். வந்திருப்பது லஞ்ச ஒழிப்பு போலீஸ் என்று தெரியாது. லஞ்ச ஒழிப்பு போலீசார் வேனில் இருந்து இறங்கியவுடனே சிலர் வாகன ஆய்வாளர் (பிரேக் இன்ஸ்பெக்டர்) அறைக்கு சென்றனர். சில போலீசார் அலுவலகத்தின் மற்ற பகுதிகளுக்கு சென்றனர். அவர்கள் உள்ளே சென்றதும் ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அலுவலகத்தின் கேட் பூட்டப்பட்டது. அலுவல் நிமித்தமாக வந்த பொதுமக்களை மட்டும் வெளியே செல்ல லஞ்ச ஒழிப்பு போலீசார் அனுமதித்தனர்.

அதன்பின்னர் வாகன ஆய்வாளர்களின் அறைகள், அலுவலக ஊழியர்களின் அறைகள் உள்பட அலுவலகத்தின் அனைத்து பகுதிகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.மதியம் 2.30 மணியளவில் அங்கு பணியாற்றிய வாகன ஆய்வாளர் பாபுவிடம் (வயது 52) லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவரிடம் சிறிது நேரம் விசாரணை நடத்தியபோது அவர் திடீரென்று மயங்கி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சிக்குள்ளான லஞ்ச ஒழிப்பு போலீசாரும், வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் சிலரும் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையின் போது வாகன ஆய்வாளர் ஒருவர் இறந்து விட்டதாக கிடைத்த தகவல் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இடையே அதிருப்தியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.

இதனால் அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு உதவி கமிஷனர் சுந்தரராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இறந்த வாகன ஆய்வாளர் பாபுவின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கவுந்தம்பாடி ஆகும். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். அவர் சென்னையில் பணியாற்றி வருகிறார். பாபு முதல் நிலை வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இதற்கு முன்பு கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 3 ஆண்டுகளும், மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒரு ஆண்டும் பணிபுரிந்து உள்ளார். பாபு உடல் இருந்த தனியார் ஆஸ்பத்திரி முன்பும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது:-

மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் குறிப்பிட்ட அதிகாரி லஞ்சம் வாங்குகிறார் என்று எங்களுக்கு புகார் வரவில்லை. ஆனால் தீபாவளி பண்டிகைக்காக ஊழியர்கள் பணம் வாங்குகிறார்கள் என்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தான் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 718 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக குறிப்பிட்ட அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட மாட்டாது.

ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு அங்குள்ள ஊழியர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். அந்த பணம் வாகன கட்டணத்துக்காக வசூல் செய்யப்பட்டதா? இல்லையா? என்று ஊழியர்கள் பதில் அளிக்க வேண்டும். தற்போது அனைத்து கட்டணமும் ஆன்லைனில் தான் செலுத்த வேண்டும். பொதுமக்கள் பணமாக யாரும் செலுத்துவதில்லை. அப்படியிருக்கும் போது பறிமுதல் செய்யப்பட்ட பணம் கணக்கில் வராத பணமாகத்தான் இருக்க வேண்டும். தற்போது பறிமுதல் செய்யப்பட்ட பணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்படும். இதுகுறித்து அப்போது பணியில் இருந்த அனைத்து ஊழியர்களும் உயர் அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு போலீசார் கூறினார்கள்.

சூலூரை அடுத்த காங்கேயம்பாளையத்தில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீரென சோதனை நடத்தினார்கள். போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேஷ், இன்ஸ்பெக்டர்கள் பரிமளா, சசிலேகா மற்றும் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் வளாகத்தில் நின்றிருந்த இடைத்தரகர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

சுமார் 3 மணி நேரம் தொடர்ந்த இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.16 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து சோதனை செய்த அதிகாரிகள் கூறும்போது, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக சூப்பிரண்டு செல்வியிடம் கணக்கில் வராத ரூ. 7 ஆயிரமும், இடைத்தரகர்களிடம் ரூ.9 ஆயிரமும் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story