கோவையில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.55 கோடி நிலத்தை விற்க முயன்ற 5 பேர் கைது
கோவையில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.55 கோடி மதிப்புள்ள நிலத்தை விற்க முயன்றதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை,-
கோவை விளாங்குறிச்சியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 70). இவரும் அதே பகுதியை சேர்ந்த தம்புராஜ், தர்மலிங்கம், ரத்தினம், லட்சுமி, ரமாபிரபா மற்றும் சாந்தி ஆகியோர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜிடம் ஒரு புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், கோவை விளாங்குறிச்சி பகுதியில் எங்களுக்கு சொந்தமான 5.48 ஏக்கர் நிலத்தை சாந்தலிங்கம் (66) உள்பட சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து விற்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
அந்த புகாரை தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், பழனிசாமி உள்பட 7 பேருக்கு சொந்தமான ரூ.55 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அதில் தங்கள் பெயர்களை சேர்த்து விற்க முயன்றது தெரிந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தலிங்கம் (66), ராமசுப்பிரமணியம் (73), ரஜினிகாந்த் (45), முருகேசன் (57), மதியழகன் (69) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக அனுஷா ரஜினிகாந்த், பவன்குமார் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:-
இந்த மோசடி வழக்கில் வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் சார் பதிவாளர் அலுவலகத்தை சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் சிலர் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ரூ.650 கோடி மதிப்புள்ள 41.83 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்க முயற்சி செய்தது தெரியவந்துள்ளது. அதுகுறித்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story