வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் - மர்ம ஆசாமிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் - மர்ம ஆசாமிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 1 Nov 2018 10:30 PM GMT (Updated: 1 Nov 2018 9:54 PM GMT)

திருப்பூரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த மர்ம ஆசாமிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனுப்பர்பாளையம், 

திருப்பூர் போயம்பாளையம் அருகே பனியன் நிறுவன தொழிலாளி தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவருடைய மனைவியும் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். 6 வயது மூத்த மகள் 2-ம் வகுப்பும், 4 வயது இளைய மகள் யு.கே.ஜி.யும் படித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு வேலை இருந்ததால் கணவன்-மனைவி இருவரும் பனியன் நிறுவனத்திற்கு சென்று விட்டனர். குழந்தைகள் இருவரும் வீட்டை உள்பக்கமாக பூட்டி விட்டு தூங்கி விட்டனர். பின்னர் நள்ளிரவு 1 மணிக்கு வேலை முடிந்து தந்தை மட்டும் வீட்டிற்கு வந்து கதவை தட்டி உள்ளார். மூத்த மகள் வந்து கதவை திறந்து விட்டு மீண்டும் தூங்க சென்றாள். இதன் பின்பு தந்தை துணிகளை துவைத்து காய போட்டு விட்டு அவர் தனது 2 மகள்களுடன் தூங்க சென்றார்.

காலை 5 மணிக்கு மனைவி வேலை முடிந்து வருவார் என்பதால் அவர் வீட்டு கதவை லேசாக திறந்து வைத்து விட்டு தூங்கி விட்டார். சிறிது நேரம் கழித்து வீட்டு காம்பவுண்டில் இருந்து குழந்தை கதறி அழும் சத்தம் கேட்டு உள்ளது.
இதனால் திடுக்கிட்டு எழுந்த அவர் அருகில் இளைய மகளான 4 வயது சிறுமி இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவரும், அவருடைய மூத்த மகளும் பதற்றத்துடன் வெளியே ஓடிச்சென்று பார்த்துள்ளனர்.

அப்போது அவருடைய இளைய மகள் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் தேம்பி தேம்பி அழுதபடி வந்தாள். அவள் உடலில் முகம், மார்பு பகுதி முழுவதும் கீறலும், ரத்தக்காயமும் இருந்துள்ளது. மேலும் சிறுமியை கடத்திச்சென்று மர்ம ஆசாமிகள் பலவந்தம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்தது.

உடனடியாக சிறுமியை ஆம்புலன்சு மூலமாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்ததும் நேற்றுகாலை அனுப்பர்பாளையம் போலீசார் மற்றும் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசார் சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து தகவலறிந்த சிறுமியின் உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர்.

அப்போது ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றும், நேற்று அதிகாலையில் அனுமதிக்கப்பட்டது முதல் நேற்றுமாலை வரை ஒரே ஒரு ஊசி மட்டுமே போடப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டினார்கள்.

மேலும் உரிய சிகிச்சை அளிக்காததால் சிறுமிக்கு தொடர்ந்து உடல்நிலை சீராகவில்லை என்றும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம ஆசாமிகளை உடனே கைதுசெய்ய வலியுறுத்தியும் புகார் தெரிவித்தனர். இதையொட்டி போயம் பாளையம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் 400-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். போயம்பாளையம் 4 ரோடு சந்திப்பில் நடைபெற்ற மறியலால் திருப்பூர்-பெருமாநல்லூர் மற்றும் பெருமாநல்லூர்-திருப்பூர் ரோட்டில் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது. இதன் காரணமாக 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் சமரசமடையாத பொதுமக்கள், அரசு ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தொடர் மறியலிலும் ஈடுபட்டனர்.

இதனால் போலீசார் அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் 1 மணி நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக பி.என்.ரோட்டில் 2 மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில் சிறுமிக்கு முறையான சிகிச்சை அளிக்காத மருத்துவரை பணிநீக்கம் செய்யக்கோரியும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம ஆசாமிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் போயம்பாளையம் ஊர் பொதுமக்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த அனைத்து கட்சி நிர்வாகிகள் சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) மாவட்ட அரசு மருத்துவமனை இணை இயக்குனருக்கும், மாநகர போலீஸ் கமிஷனரிடமும் புகார் மனு கொடுக்கப்பட உள்ளது. இதுகுறித்து திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 4 வயது சிறுமியை தூக்கி சென்று மர்ம ஆசாமிகள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story