ரசாயனம் கலந்து நிறத்தை சேர்த்த 1 டன் இனிப்பு, கார வகைகள் பறிமுதல் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
ரசாயனம் கலந்து நிறத்தை சேர்த்த 1 டன் இனிப்பு, காரவகைகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
திருப்பூர்,
மாநில உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அமுதா உத்தரவின் பேரில் தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்டம் முழுவதும் பலகார கடைகள், பேக்கரிகள் மற்றும் இனிப்பு கடைகளில் ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்ட நியமன அதிகாரி தமிழ்செல்வன் தலைமையில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பாலமுருகன், சதீஷ்குமார், கேசவராஜ், லோகநாதன், அம்ஜத்கான் ஆகியோர் பல்லடம் மற்றும் பொங்கலூர் பகுதிகள் மற்றும் உடுமலை வட்டார பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வின் போது 2 டன் லேபிள் இல்லாத எண்ணெய் மற்றும் நிறம் சேர்ப்பதற்கு ரசாயனம் கலந்த 1 டன் இனிப்பு மற்றும் கார வகைகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் ஆகும்.
இது குறித்து மாவட்ட நியமன அதிகாரி தமிழ்செல்வன் கூறியதாவது:-
உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழு அமைக்கப்பட்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலகார கடைகள், திருமண மண்டபங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இனிப்பு மற்றும் கார வகைகளில் நிறமி (கலர்) ரசாயனம் கலந்து நிறத்தை சேர்க்க கூடாது. மேலும், உணவு பாதுகாப்புத்துறை உரிமம் கட்டாயம் பெற்று இருக்க வேண்டும். கலர் கெமிக்கல் சேர்ப்பவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், தரமான எண்ணெய், மாவு வகைகள், ஆர்.ஓ. குடிநீர் பயன்படுத்த வேண்டும். தொழிலாளர்கள் கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்திருக்க வேண்டும். மேலும், இனிப்பு தயாரிக்கப்படும் இடம் சுத்தமாகவும், சுகாதாரமான முறையிலும் இருக்க வேண்டும். இனிப்பு பொருட்களை மூடி பாதுகாப்பாக வைக்க வேண்டும். பிளாஸ்டிக் தவிர்க்கப்பட வேண்டும். மேலும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், போலி டீத்தூள்கள், தரமற்ற உணவு பொருட்கள், உணவகங்களில் தரம் குறைவாக இருந்தால் 94440-42322 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story