பொங்கலூர் அருகே: நகைக்காக தம்பதியை கொலை செய்த வழக்கில் 2 பேர் கைது


பொங்கலூர் அருகே: நகைக்காக தம்பதியை கொலை செய்த வழக்கில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 Nov 2018 3:30 AM IST (Updated: 2 Nov 2018 4:01 AM IST)
t-max-icont-min-icon

பொங்கலூர் அருகே நகைக்காக தம்பதியை கொலை செய்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பொங்கலூர், 

திருப்பூர் மாவட்டம், பொங்கலூரை அடுத்த நாச்சிபாளையம் நத்தக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி (வயது 73). இவரது மனைவி தெய்வாத்தாள் (68). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர்கள் இருவரும் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந் தேதி இரவு 12 மணிக்கு அந்த வழியாக அவினாசிபாளையம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது இவர்களது வீட்டில் மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்து சந்தேகத்தின் பேரில் போலீசார் அங்கு சென்றனர்.

அப்போது வீட்டின் காம்பவுண்டு சுவர் அருகில் தெய்வாத்தாளும், வீட்டின் உள்ளே சமையல் அறையில் முத்துக்குமாரசாமியும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இவர்கள் இருவரையும் கட்டையை பயன்படுத்தி கொலையாளிகள் கொலை செய்து இருப்பது தெரியவந்தது. மேலும் தெய்வாத்தாள் கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் தாலிக்கொடியையும், செல்போனையும் காணவில்லை. வீட்டில் இருந்த பீரோவை கொலையாளிகள் கடப்பாரையால் நெம்பி திறக்க முயன்று இருப்பதும், ஆனால் பீரோவை திறக்க முடியாததால் அப்படியே விட்டு இருப்பதும் தெரியவந்தது. பின்னர் வீட்டின் மேஜையில் இருந்த ¼ பவுன் மோதிரம் மற்றும் தெய்வாத்தாள் அணிந்து இருந்த 6 பவுன் தாலிக்கொடி ஆகியவற்றை கொலையாளிகள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி மேற்பார்வையில் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி தலைமையில் அவினாசிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுச்சாமி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவர்த்தனாம்பிகை, தவசியப்பன், அசோக்குமார், சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் செந்தாமரைசெல்வன், விஜயகுமார், மதிவாணன்ராஜா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து, கொலை செய்யப்பட்ட தம்பதியின் வீட்டில் இருந்து காணாமல் போன செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை கொண்டு தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணம் சிறுநாடார் குடியிருப்பை சேர்ந்த முத்துசேகர் என்பரது மகன் சித்திரைராஜா (22) மற்றும் திருச்செந்தூர் தாலுகா தாங்கையூர் கைலாசபுரம் சந்தோஷ்நாடார் மகன் சுயம்புலிங்கம் (35) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான சித்திரைராஜா போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம் விவரம் வருமாறு:-

எனது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணம் சிறுநாடார் குடியிருப்பாகும். என் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் இருந்தேன். அப்போது சிறையில் இருந்த சுயம்புலிங்கத்துடன் பழக்கம் ஏற்பட்டது. இதற்கிடையில் என் மீதான வழக்கில் ஜாமீன் கிடைத்தது. பின்னர் அவரும் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பின்னர் நான் திருப்பூர், ராக்கியாபாளையம் பிரிவு அருகே பழைய பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கி, விற்கும் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டு நாச்சிபாளையம் பகுதியில் தங்கி இருந்தேன்.

அப்போது நாச்சிபாளையத்தை சேர்ந்த முத்துக்குமாரசாமி வீட்டின் அருகில் உள்ள சுப்பையா கவுண்டர் என்பவரது வீட்டிற்கு பகுதி நேர டிரைவராக அவ்வப்போது வேலை பார்த்தேன். அப்போதுதான் முத்துக்குமாரசாமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் முத்துக்குமாரசாமி மற்றும் அவரது மனைவி ஆகியோர் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதும், அவர்களிடத்தில் நகை மற்றும் பணம் இருப்பதும் தெரியவந்தது.

இந்த விவரத்தை சுயம்புலிங்கத்திடம் செல்போனில் தெரிவித்தேன். இதையடுத்து இருவரையும் கொலை செய்து விட்டு அவர்களது வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க முடிவு செய்தோம். இந்த திட்டத்தை நிறைவேற்ற சுயம்புலிங்கம் ஊரில் இருந்து திருப்பூர் வந்தார்.

பின்னர் நாங்கள் இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந் தேதி இரவு முத்துக்குமாரசாமி வீட்டிற்கு சென்றோம். அங்கு வீட்டில் இருந்த முத்துக்குமாரசாமி மற்றும் அவரது மனைவி தெய்வாத்தாள் ஆகிய இருவரையும் மரக்கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு 6 பவுன் தாலிக்கொடி, ஒரு செல்போன், ¼ பவுன் மோதிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றோம். இந்த நிலையில் காணாமல் போன செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை கொண்டு போலீசார் எங்கள் இருவரையும் கைது செய்து விட்டனர்.

இவ்வாறு சித்திரை ராஜா வாக்கு மூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்களிடம் இருந்து 6 பவுன் தாலிக்கொடியையும், ¼ பவுன் மோதிரத்தையும் போலீசார் மீட்டனர். சித்திரைராஜா மீது குலசேகரப்பட்டிணத்தில் 4 திருட்டு வழக்குகளும், சுயம்புலிங்கத்தின் மீது சாயல்புரம், ஏரல் ஆகிய போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி கோவைசிறையில் அடைத்தனர். பொங்கலூர் அருகே தம்பதியை கொலை செய்து நகையை கொள்ளையடித்து சென்ற வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story