சத்துணவு ஊழியர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம் : ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்,
காலமுறை ஊதியம், சத்துணவு மானியம் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 4-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை.
இதனால் பள்ளி மாணவர்களுக்கு நேற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் மூலம் சத்துணவு தயாரித்து வழங்கப்பட்டது. அதேநேரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள், அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தவகையில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் வட்டார தலைவர் முருகவள்ளி தலைமை தாங்கினார். மேலும் செயலாளர் நாராயணசாமி, செயற்குழு உறுப்பினர் ஜெசி மற்றும் சத்துணவு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் பலர் கருப்பு ஆடை அணிந்து வந்திருந்தனர்.
இதேபோல் நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டார தலைவர் காட்டுராஜா தலைமை தாங்கினார். இதில் செயலாளர் கந்தசாமி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் மகுடபதி மற்றும் 200-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதில் பலர் கருப்பு ஆடை அணிந்து பங்கேற்றனர்.
வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக்அலி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, சத்துணவு ஊழியர்கள் சங்க வட்டார தலைவர் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story