திருட முயன்ற போது மாடியில் இருந்து குதித்த சம்பவம்: வாலிபரின் மேல் சிகிச்சை செலவை ஏற்க சொல்வதா? போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


திருட முயன்ற போது மாடியில் இருந்து குதித்த சம்பவம்: வாலிபரின் மேல் சிகிச்சை செலவை ஏற்க சொல்வதா? போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Nov 2018 3:00 AM IST (Updated: 2 Nov 2018 4:34 AM IST)
t-max-icont-min-icon

திருட முயன்றபோது 3-வது மாடியில் இருந்து குதித்து பொதுமக்களிடம் சிக்கிய வாலிபரின் மேல் சிகிச்சை செலவை ஏற்க சொல்வதா? என்று போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விருத்தாசலத்தில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

விருத்தாசலம், 

விருத்தாசலம் முல்லை நகரில் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது. இந்த சம்பவத்தில் போலீசார் இதுவரையில் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதனால் திருடனை எப்படியும் மடக்கி பிடித்து விட வேண்டும் என்று, அந்த பகுதி மக்கள் இரவு நேரத்தில் கண்காணித்து வந்தனர்.

அந்த வகையில், நேற்று முன்தினம் இரவு ஒரு வீட்டில் 3-வது மாடியில் ஏறி, ஜன்னலை உடைத்து உள்ளே நுழையும் முயற்சியில் சுமார் 30 வயதுடைய வாலிபர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். இதை பார்த்த அந்த பகுதி மக்கள், ஒன்று திரண்டு வந்து, அந்த வாலிபரை பிடிப்பதற்காக சுற்றி வளைத்தனர்.

இதனால், பயந்துபோன அந்த வாலிபர், தப்பி ஓடுவதற்காக 3-வது மாடி ஜன்னல் பகுதியில் இருந்து குதித்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் வாலிபரை மடக்கி பிடித்து, தர்மஅடி கொடுத்து விருத்தாசலம் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த அந்த வாலிபரை சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக கடலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று போலீசாரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து, மேல் சிகிச்சைக்கு அழைத்து செல்லும் செலவை, அந்த வாலிபரை பிடித்து கொடுத்தவர்கள் தான் ஏற்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைக்கேட்ட முல்லை நகர் பொதுமக்கள், விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்து, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, திருடனை பிடித்து கொடுப்பது தான் எங்களது வேலை, அவனுக்கு சிகிச்சை அளிப்பதற்கு நாங்கள் எதற்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். அவன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யுங்கள் என்று தெரிவித்தனர். வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து, அங்கிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொட்டா, பொதுமக்களை சமாதானப்படுத்தினார். பின்னர், அந்த வாலிபரை மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story