ஆம்பூரில் பிரபல நகைக்கடை உள்பட 4 இடங்களில் ‘திடீர்’ சோதனை வருமான வரித்துறையினர் அதிரடி
ஆம்பூரில் பிரபல நகைக்கடை உள்பட 4 இடங்களில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆம்பூர்,
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் பிரபல தொழிலதிபர் சகோதரர்கள் சி.லிக்மிசந்த் சிங்வி, அசோக்சந்த் சிங்வி. இதில் லிக்மிசந்த் சிங்வி ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் தாளாளராக இருந்து வருகிறார். அசோக்சந்த் சிங்வி நகைக்கடை மற்றும் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் ஆயில் நிறுவனத்தை நடத்தி வருகிறார்
இவர்களின் வீடு மற்றும் நகைக்கடை ஷராப் பஜார் பகுதியில் உள்ளது. ஆயில் நிறுவனம் ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியிலும், தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க்கும் அமைந்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து வருமானவரித்துறை அதிகாரிகள் 8 வாகனங்களில் பெண் அதிகாரி உள்பட சுமார் 40 பேர் கொண்ட குழுவினர் மாலை 3 மணிக்கு ஆம்பூர் வந்தனர். அவர்கள் நகைக்கடை, சகோதரர்களின் வீடுகள், ஆயில் நிறுவனம், பெட்ரோல் பங்க் ஆகிய 4 இடங்களிலும் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, நகைக்கடையின் முன்பக்க ஷட்டர் இழுத்து மூடப்பட்டு இருந்தது. மேலும் நகைக்கடை, வீடுகள், ஆயில் நிறுவனம், பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள் யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் பணியாளர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.
சோதனையில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர், நகைக்கடைக்கு அருகே உள்ள குடோன் கிடங்கை திறந்து சோதனை நடத்தினார். அங்கிருந்த சில நகைகளையும் எடுத்து கொண்டு, கடை அருகே உள்ள அவர்களுடைய வீட்டுக்கு அதிகாரிகள் சென்றனர்.
ஆம்பூரில் ஒரே நேரத்தில் 4 இடங்களில் வருமானவரித்துறையினர் திடீரென சோதனை நடத்தி வரும் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story