கமலா மில் வளாக தீ விபத்து: கேளிக்கை விடுதி உரிமையாளர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி


கமலா மில் வளாக தீ விபத்து: கேளிக்கை விடுதி உரிமையாளர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 2 Nov 2018 5:14 AM IST (Updated: 2 Nov 2018 5:14 AM IST)
t-max-icont-min-icon

கமலா மில் வளாக தீ விபத்து தொடர்பாக கைதான 2 கேளிக்கை விடுதி உரிமையாளர்களின் ஜாமீன் மனுவை மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மும்பை,

மும்பை லோயர்பரேல் கமலா மில் வளாகத்தில் உள்ள 4 மாடி கட்டிடத்தின் மொட்டை மாடியில் செயல்பட்டு வந்த ‘ஒன் அபோவ்’ மற்றும் ‘மோஜோ பிரிஸ்டோ’ ஆகிய 2 கேளிக்கை விடுதிகளில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்கு பிறந்தநாள் கொண்டாடிய இளம்பெண் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

இந்த தீ விபத்து தொடர்பாக ‘ஒன் அபோவ்’ மற்றும் ‘மோஜோ பிரிஸ்டோ’ கேளிக்கை விடுதி உரிமையாளர்கள் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மீது பிப்ரவரி மாதம் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மே மாதம் கமலா மில் வளாக உரிமையாளர்கள் ரமேஷ் கோவனி, ரவி பண்டாரி இருவருக்கும் மும்பை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

‘ஒன் அபோவ்’ கேளிக்கை விடுதியின் உரிமையாளர்கள் ஹிருபேஷ் சங்க்வி, ஜிகர் சங்க்வி, அபிஜித் மான்கர் மற்றும் ‘மோஜோ பிரிஸ்டோ’ கேளிக்கை விடுதி உரிமையாளர்களில் ஒருவரான யுக் பதக் ஆகிய 4 பேர் தங்களுக்கு ஜாமீன் கேட்டு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்தநிலையில், நேற்று அவர்களது ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிபதி பிரகாஷ் நாயக் முன்னிலையில் நடந்தது. அப்போது கேளிக்கை விடுதி உரிமையாளர்கள் 4 பேரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

அவர்கள் 4 பேரும் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story