அரசின் தொடர் நடவடிக்கையால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளது அமைச்சர் கமலக்கண்ணன் தகவல்


அரசின் தொடர் நடவடிக்கையால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளது அமைச்சர் கமலக்கண்ணன் தகவல்
x
தினத்தந்தி 2 Nov 2018 5:18 AM IST (Updated: 2 Nov 2018 5:18 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி அரசின் தொடர் நடவடிக்கையால், இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளது என அமைச்சர் கமலக் கண்ணன் கூறினார்.

காரைக்கால்,

புதுச்சேரி அரசின் 64-வது விடுதலை நாள் விழா, நேற்று காரைக்கால் கடற்கரை சாலையில் நடைபெற்றது. விழாவிற்கு அமைச்சர் கமலக் கண்ணன் தலைமை தாங்கி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து, போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் அசனா எம்.எல்.ஏ, மாவட்ட கலெக்டர் கேசவன், போலீஸ் சூப்பிரண்டுகள் வம்சீதரரெட்டி, மாரிமுத்து மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் அமைச்சர் கமலக்கண்ணன் பேசியதாவது:- பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பிறகு, 1954 நவம்பர் 1-ந் தேதி புதுச்சேரி மாநிலம் அதிகாரப்பூர்வமாக இந்தியாவுடன் இணைந்தது. இதைதான் புதுச்சேரி விடுதலை நாளாக நாம் கொண்டாடுகிறோம். காரைக்காலில், அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், தரத்தை உயர்த்தவும் முயற்சிகள் எடுத்துள்ளோம். மேலும், கல்வித்துறையில் மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெயரில் முதுகலை பட்ட மேற்படிப்பு நிறுவனம் ஒன்று இந்த ஆண்டு நிறுவப்படவுள்ளது.
புதுச்சேரி அரசின் தொடர் நடவடிக்கையால், இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு (2017) அக்டோபர் மாதம் வரை 936 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு (2018) அக்டோபர் மாதம் வரை 26 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தின் 2-வது கட்ட விரிவாக்கம் எங்கள் அரசின் முயற்சியால் மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, ரூ.55 கோடியில் மிகவிரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளது.

நெய்வேலியில் இருந்து காரைக்கால் துணை மின்நிலையத்திற்கு நேரடியாக மின்சாரம் பெறும் பணி விரைவில் முடியவுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வதை தவிர்த்து, குறைவான விலையில் மின்சாரம் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. காரைக்கால் நகர் பகுதியில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் ரூ.50 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வருகிறது. இதேபோல் இன்னும் பல வளர்ச்சித்திட்டங்களை நமது அரசு செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விழாவின்போது தியாகிகளுக்கு அமைச்சர் கமலக்கண்ணன் கதராடை போர்த்தி கவுரவித்தார்.

Next Story