பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரி மாணவர்கள்-பெற்றோர் சாலைமறியல் தர்மபுரி அருகே பரபரப்பு


பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரி மாணவர்கள்-பெற்றோர் சாலைமறியல் தர்மபுரி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 2 Nov 2018 12:16 AM GMT (Updated: 2 Nov 2018 12:16 AM GMT)

தர்மபுரி அருகே பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரி மாணவர்கள்-பெற்றோர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் உள்ள வகுப்பறைகளின் மேல்பகுதியில் கான்கிரீட் பூச்சு சேதமடைந்து உள்ளது. இதனால் மேற்கூரையின் சில பகுதிகள் அவ்வப்போது பெயர்ந்து விழுந்தன. இதனால் மாணவ-மாணவிகள் வகுப்பறைகளில் அச்சத்துடன் கல்வி கற்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

தற்போது பருவமழை காலம் தொடங்கி இருப்பதை கருத்தில் கொண்டு அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித்தருமாறு நடுப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று நடுப்பட்டியில் தர்மபுரி-அரூர் சாலையில் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அந்த பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி தாசில்தார் ராதா கிருஷ்ணன் மற்றும் மதிகோன்பாளையம் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டிடத்தை கட்டித்தர வேண்டும். அதுவரை மாற்று இடத்தில் பள்ளி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை மறியலில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார்கள். கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story