30 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி ‘108 ஆம்புலன்ஸ்’ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நாமக்கல்லில் நடந்தது


30 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி ‘108 ஆம்புலன்ஸ்’ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நாமக்கல்லில் நடந்தது
x
தினத்தந்தி 2 Nov 2018 5:58 AM IST (Updated: 2 Nov 2018 5:58 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகைக்கு 30 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி நேற்று நாமக்கல்லில், ‘108 ஆம்புலன்ஸ்’ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்,

‘108 ஆம்புலன்ஸ்’ தொழிலாளர்களுக்கு 30 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி நேற்று சென்னை, மதுரை மற்றும் நாமக்கல் என மண்டல அளவில் தமிழ்நாடு ‘108 ஆம்புலன்ஸ்’ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தனபால் தலைமை தாங்கினார். கோவை மண்டல பொறுப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். இதில் கோவை மண்டல தலைவர் சுரேஷ் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது தீபாவளி போனசுக்காக அரசு வழங்க முன்வந்துள்ள தொகைக்கு, பிற மாநிலங்களை காரணம் காட்டி முட்டுக்கட்டை போடக்கூடாது. ஈட்டிய விடுப்பு தொகை வழங்க வேண்டும். தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருப்பூர், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி என 12 மாவட்டங்களை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

தீபாவளி பண்டிகைக்குள் எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில் வருகிற 7-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளோம் என சங்க நிர்வாகிகள் கூறினர்.

Next Story