பெரியகுளம் அருகே: பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை - கணவர், மாமனார் உள்பட 4 பேர் மீது வழக்கு
பெரியகுளம் அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக கணவர், மாமனார் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
பெரியகுளம்,
பெரியகுளம் அருகே உள்ள எ.புதுப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 52). இவரது மகன் செல்வபாண்டியன். இவர் சவுதிஅரேபியாவில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். அவருடன் மனைவி செல்வியும்(22) தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு செல்வபாண்டியனின் தாய் பாண்டியம்மாள் இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து கணவன்-மனைவி இருவரும் எ.புதுப்பட்டிக்கு வந்தனர்.
பின்னர் சில நாட்களுக்கு முன்பு செல்வபாண்டியன் மட்டும் சவுதிஅரேபியாவுக்கு திரும்பி சென்றார். மனைவி செல்வியை தந்தைக்கு சமைத்து கொடுக்க சொல்லிவிட்டு இங்கேயே இருக்குமாறு கூறி சென்றுவிட்டார்.
இந்நிலையில் கடந்த மாதம் 26-ந் தேதி திண்டுக்கல் மாவட்டம், சொக்கலிங்கபுரத்தில் உள்ள செல்வியின் பெரியப்பா மாயி இறந்துவிட்டார். இந்த துக்க நிகழ்ச்சிக்கு செல்வி அவரது மாமனார் ராஜேந்திரன், நாத்தனார் வைரமணி ஆகிய 3 பேரும் சென்றுள்ளனர். பின்னர் செல்வி 2 நாட்கள் அங்கேயே தங்கிவிட்டு வருவதாக மாமனாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து எ.புதுப்பட்டிக்கு அழைத்து வந்துவிட்டனர்.
பின்னர் மீண்டும் ஊருக்கு செல்வதற்காக செல்வி, மாமனார் ராஜேந்திரனிடம் கேட்டுள்ளார். அப்போது சவுதிஅரேபியாவிலிருந்து செல்போன் மூலமாக செல்வபாண்டியன், செல்வியிடம் பேசும்போது திருமண சீர்வரிசை மற்றும் வரதட்சணையாக பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து சொக்கலிங்கபுரத்தில் உள்ள உன் தந்தை பெயரில் உள்ள சொத்தை எழுதி வாங்கி வா என்று கூறி செல்வியை தகாத வார்த்தையில் ராஜேந்திரன், நாத்தனார் வைரமணி, அவரது கணவர் புலிமுருகன் ஆகிய 3 பேரும் சேர்ந்து தாக்கினர். மேலும் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலைமுயற்சியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து செல்வி பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக கணவர் செல்வபாண்டியன், மாமனார் ராஜேந்திரன், நாத்தனார் வைரமணி மற்றும் அவரது கணவர் புலிமுருகன் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story