முத்துப்பேட்டையில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது


முத்துப்பேட்டையில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 3 Nov 2018 4:15 AM IST (Updated: 2 Nov 2018 11:12 PM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டையில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

முத்துப்பேட்டை, 

முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் வடகாடு பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 60), முத்துப்பேட்டை தர்மர் கோவிலை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (50), முத்துப்பேட்டையை சேர்ந்தவர் செல்வம் (35) ஆகிய 3 பேரும் சம்பவத்தன்று இரவு தங்களது வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு தூங்க சென்றனர். மறுநாள் காலையில் பார்த்தபோது மோட்டார் சைக்கிள்களை காணவில்லை. மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து 3 பேரும் முத்துப்பேட்டை போலீசில் தனித்தனியே புகார் கொடுத்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கோவிலூரை சேர்ந்த சேகர் மகன் அசோக் என்ற ஜெயபால் (24), முத்துப்பேட்டையை சேர்ந்த சீனிவாசன் மகன் வெங்கடேசன் (22), முத்துப்பேட்டை-பட்டுக்கோட்டை சாலையை சேர்ந்த அஜீத் (22) ஆகிய 3 பேரையும் பிடித்து சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் 3 பேரும், ரவீந்திரன், சுப்பிரமணியன், செல்வம் ஆகியோரின் மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது.

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபால், வெங்கடேசன், அஜீத் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Next Story