சின்ன முதலைப்பட்டி அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு


சின்ன முதலைப்பட்டி அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 3 Nov 2018 4:15 AM IST (Updated: 3 Nov 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே சின்ன முதலைப்பட்டி அரசு பள்ளியில் கலெக்டர் ஆசியா மரியம் திடீர் ஆய்வு செய்தார்.

நாமக்கல்,

நாமக்கல் அருகே உள்ள சின்னமுதலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் இருந்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை மற்றும் வருகை பதிவேட்டை சரிபார்த்தார்.

அதைத்தொடர்ந்து சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவை அவர் ஆய்வு செய்தார். பின்னர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு வகைகள் குறித்து சத்துணவு அமைப்பாளர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

மேலும் குழந்தைகளுக்கான உணவை சமைக்கும் போதும், பரிமாறும் போதும் மிகுந்த கவனத்துடனும், ஈடுபாட்டுடனும் பணிபுரிய வேண்டும் என சத்துணவு அமைப்பு பணியாளர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார். அதேபோல் உணவு பொருட்கள் இருக்கும் பாத்திரங்களை சரியான முறையில் மூடிவைத்து சுகாதாரமான உணவை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என கலெக்டர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மாரிமுத்துராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள் உடனிருந்தனர்.

Next Story