திருநாவலூர் காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை - ரூ.2 லட்சம் ரொக்கம், ஏராளமான பட்டாசு பெட்டிகள் பறிமுதல்
திருநாவலூர் காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் ஏராளமான பட்டாசு பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
உளுந்தூர்பேட்டை,
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்துக்குட்பட்டது திருநாவலூர் காவல் நிலையம். இங்கு பணிபுரியும் போலீசார், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் இருந்து பணம் மற்றும் பரிசு பொருட்களை வாங்குவதாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் 2 வாகனங்களில் நேற்று இரவு 7.15 மணியளவில் திருநாவலூர் காவல் நிலையத்துக்கு சென்றனர்.
பின்னர் போலீஸ்காரர்களை காவல் நிலையத்துக்குள் வைத்து கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு சோதனை நடத்தினர். அப்போது போலீஸ்காரர்கள் அமர்ந்திருக்கும், மேஜை, டிராயர்கள், அறைகளில் கணக்கில் காட்டப்படாத பணம் உள்ளதா? என போலீசார் சோதனையிட்டனர். இதில் கட்டுக்கட்டாக பணமும், பட்டாசு பெட்டிகளும் இருந்தன.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோசிடம் 1 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதைதொடர்ந்து அவரை போலீஸ் நிலையம் அருகில் குடியிருப்பில் உள்ள அவரின் வீட்டுக்கு, லஞ்ச ஒழிப்பு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது அங்கும் ஏராளமான பட்டாசு பெட்டிகள் இருந்தது தெரியவந்தது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 19 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏராளமான பட்டாசு பெட்டிகள், புதிய துணிமணிகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோசிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். மேலும் காவல் நிலையத்தில் உள்ள போலீஸ்காரர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நள்ளிரவு வரை தீவிர விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story