கங்கைகொண்டானில் அடுத்தடுத்து விபத்து: மினி வேன் கவிழ்ந்ததால் 2 பஸ்கள் மோதல்; 20 பேர் படுகாயம்


கங்கைகொண்டானில் அடுத்தடுத்து விபத்து: மினி வேன் கவிழ்ந்ததால் 2 பஸ்கள் மோதல்; 20 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 3 Nov 2018 5:15 AM IST (Updated: 3 Nov 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

கங்கைகொண்டானில் மினி வேன் கவிழ்ந்ததால், 2 பஸ்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. இந்த விபத்துகளில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

கயத்தாறு,

மதுரையில் இருந்து மசாலா பாக்கெட் பண்டல் லோடு ஏற்றிய மினி வேன் நேற்று காலையில் நெல்லைக்கு புறப்பட்டு வந்தது. 9.30 மணியளவில் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் இசக்கி அம்மன் கோவில் அருகில் உள்ள வளைவில் நாற்கர சாலையில் வந்தபோது, லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மினி வேன் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.

அப்போது மினி வேனின் பின்னால் அரசு விரைவு பஸ் சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை நெல்லையை சேர்ந்த சுப்பையா (வயது 52) ஓட்டி வந்தார். மினி வேன் கவிழ்ந்ததை பார்த்ததும், டிரைவர் சுப்பையா பஸ்சை உடனே நிறுத்தினார்.

அப்போது அந்த அரசு விரைவு பஸ்சின் பின்னால் மதுரையில் இருந்து நெல்லைக்கு மற்றொரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சை டிரைவர் அமர்நாத் (48) ஓட்டி வந்தார். அந்த பஸ்சில் கண்டக்டராக பரமசிவம் (43) இருந்தார். அரசு விரைவு பஸ் திடீரென்று நின்றதும், டிரைவர் அமர்நாத் ஓட்டி வந்த பஸ்சை உடனே நிறுத்த முயன்றார். ஆனால் அரசு விரைவு பஸ்சின் பின்புறமாக அந்த பஸ் பயங்கரமாக மோதியது.

இதற்கிடையே விபத்துக்குள்ளான பஸ்களை பின்தொடர்ந்து மற்றொரு கார் வந்தது. அந்த காரை விருதுநகரை சேர்ந்த பாண்டி மகன் சுந்தர் (29) ஓட்டி வந்தார். அவர் விபத்துக்குள்ளான பஸ்களின் மீது மோதாமல் இருப்பதற்காக காரை இடதுபுறமாக திருப்பினார். இதில் நிலைதடுமாறிய கார், நாற்கர சாலையோர தடுப்பு கம்பிகளை உடைத்து கொண்டு பாய்ந்து நின்றது.

கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த விபத்தில் மதுரையில் இருந்து வந்த பஸ்சின் டிரைவர் அமர்நாத், கண்டக்டர் பரமசிவம் மற்றும் அந்த பஸ்சில் பயணம் செய்த மதுரையை சேர்ந்த பழனிவேல், நவநீதகிருஷ்ணன், மோகன், கோவில்பட்டியை சேர்ந்த ஸ்ரீதேவி உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்ததும், கங்கைகொண்டான் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த 20 பேரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் மினி வேன், கார், அரசு விரைவு பஸ்சில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story