அரசு அனுமதித்த நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை போலீஸ் கமிஷனர் சங்கர் பேட்டி
அரசு அனுமதித்த நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் தெரிவித்தார்.
சேலம்,
தீபாவளி பண்டிகை வருகிற 6-ந் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, சேலம் மாநகரில் பழைய பஸ்நிலையம், கடைவீதி, முதல் அக்ரஹாரம், புதிய பஸ்நிலையம், அழகாபுரம், 5 ரோடு, ஜங்சன் உள்ளிட்ட பல பகுதிகளில் ஜவுளிகள், நகைகள் மற்றும் இனிப்பு வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை, பணத்தை திருடும் மர்ம ஆசாமிகளை பிடிக்கும் வகையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
குறிப்பாக 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நேற்று முதல் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர ஊர்க்காவல் படை வீரர்களும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தற்காலிக பஸ் நிறுத்தம் குறித்து தகவலை தெரிவிக்கவும் நுழைவு வாயில் பகுதியில் போலீஸ் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் போலீஸ் கமிஷனர் சங்கர் கலந்து கொண்டு உதவி மையத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பட்டாசு வெடிப்பது குறித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதனை நடைமுறைப்படுத்தும் வகையில், எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அரசு அறிவுரை வழங்கி உள்ளது. இதுகுறித்து போலீஸ் துறை சார்பில் 2 நாட்கள் முகாம்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அரசு அனுமதித்த நேரத்தில் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க வேண்டும். மற்ற நேரத்தில் பட்டாசு வெடிப்பது குறித்து புகார் வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். உதவி மைய தொடக்க நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் தங்கதுரை, சியாமளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story