வருகிற 29, 30-ந்தேதிகளில் நடைபெற உள்ள டெல்லி முற்றுகை போராட்டத்தில் 5 ஆயிரம் தமிழக விவசாயிகள் பங்கேற்பு திருச்சியில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு


வருகிற 29, 30-ந்தேதிகளில் நடைபெற உள்ள டெல்லி முற்றுகை போராட்டத்தில் 5 ஆயிரம் தமிழக விவசாயிகள் பங்கேற்பு திருச்சியில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 3 Nov 2018 4:15 AM IST (Updated: 3 Nov 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 29 மற்றும் 30-ந் தேதிகளில் புது டெல்லியில் நடைபெற உள்ள முற்றுகை போராட்டத்தில் தமிழக விவசாயிகள் 5 ஆயிரம் பேர் பங்கேற்பது என திருச்சியில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி,

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் மாநில தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் பழனிவேல் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

விவசாயிகள் வங்கியில் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு லாபகரமான விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் வருகிற 29 மற்றும் 30-ந்தேதிகளில் இந்தியா முழுவதும் இருந்து 30 லட்சம் விவசாயிகள் பங்கேற்கும் டெல்லி முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்பது.

நதிகளை தேசியமயமாக்கி அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும், 60 வயது முடிந்த அனைத்து விவசாயிகளுக்கும் மகன், மகள், பட்டா நிலம் இருந்தாலும் மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கவேண்டும், காவிரியில் கர்நாடக வெள்ள நீரை ஒரு மாதத்தில் திறந்து விட்டு விட்டு நடுவர் மன்ற தீர்ப்பில் கூறியவாறு மாதா மாதம் தண்ணீர் கொடுக்காமல் ஏமாற்ற நினைத்தால் மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்வது.

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். விளை பொருட்களுக்கு லாபகரமான விலை இல்லை, மழையும் இல்லை. இந்த நிலையில் விவசாயிகளின் நகை, டிராக்டர் ஆகியவற்றை வங்கிகள் ஏலம் விடுவதை உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும், கொள்ளிடம் பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும், காவிரி, கொள்ளிடத்தில் கூடுதல் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் நடத்துவது.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story