மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை தம்பிதுரை பேட்டி
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.
வையம்பட்டி,
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நேற்று திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியப்பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றார்.
பின்னர் கன்னிவடுகபட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் பொதுவாக பல்வேறு இடங்களுக்கு செல்லும் போது மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் சில நேரத்தில் மத்திய அரசின் திட்டங்கள் சரியாக வரவில்லை என்று சொல்வேன். அதற்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் என்மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். மேலும் எனக்கு மனப்பரிசோதனை செய்திட வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் நான் அனைத்து பரிசோதனைகளுக்கும் தயாராக உள்ளேன். எனக்கும் அவருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
தமிழக அரசைப் பொறுத்தவரை எல்லா திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. ஆனால் மத்திய அரசு தான் தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை தராமல் காலம் தாழ்த்துகிறது. ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த காலம் முதலே ரூ.18 ஆயிரம் கோடியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தாலும் கூட இதுவரை அந்த நிதி வரவில்லை.
மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் பணமானது மக்களின் வரிப்பணம். ஆனால் மத்திய அரசுக்கு, ஏதோ அவர்கள் தனியாக பணம் வைத்திருப்பது போலவும் மாநில அரசுக்கு தனியாக பணம் இருப்பது போலவும் பேசுவது அர்த்தமற்ற விவாதம்.
எந்த திட்டமாக இருந்தாலும் மத்திய அரசு நிதி தந்தால் மட்டுமே அதை மாநில அரசு செயல்படுத்த முடியும். ஆனால் திட்டங்களை அறிவிக்கும் மத்திய அரசு அதற்கான நிதியை தருவதில்லை. இருப்பினும் எல்லா திட்டங்களையும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வந்தாலும் கூட திட்டங்களை செயல்படுத்தாமல் விட்டுவிடுவதாக பொய்யான தகவலை மத்திய அரசை சேர்ந்தவர்கள் அரசியலுக்காக பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
சி.பி.ஐ. பற்றி இப்போது எல்லோருக்கும் நன்றாக தெரியும். இப்போது இயக்குனர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள நாகேஸ்வர ராவ் மனைவி மீதும் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றது. இப்படிப்பட்ட ஒரு சி.பி.ஐ. யை பயன்படுத்திக்கொண்டு அ.தி.மு.க.வை ஒழிக்க வேண்டும் என்று தி.மு.க. ஆளும் கட்சியான பா.ஜ.க.வை நாடி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story